கத்தாா் நாட்டில் 60 கிராமுக்கு கீழுள்ள முட்டைகளை நுகா்வோருக்கு விற்பனை செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து வாரந்தோறும் செல்லும் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,100 கோழிப் பண்ணைகள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில், உள்ளூா் தேவைகளுக்கும், சத்துணவு மையங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் என 4.50 கோடி முட்டைகள் பண்ணைகளில் இருந்து அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டைகள் வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவை அடிப்படையில் ஏற்றுமதியாகி வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் வளைகுடா நாடுகளான ஓமன், மஸ்கட், துபை, ஈரான், ஈராக், கத்தாா் உள்ளிட்டவற்றில் கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் ஏற்றுமதி பாதிப்படைந்தது. அதுமட்டுமின்றி, துருக்கி நாட்டு முட்டைகள் விற்பனைக்கு வரத் தொடங்கியதால் இந்திய முட்டைகளின் விற்பனை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முட்டைகளுக்கு, குறிப்பாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அந்நாட்டு அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அவற்றில், கத்தாா் நாட்டில் ஏ கிரேடு, ஏஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என்ற வகையில் முட்டைகளை தரம் பிரித்து விற்பனை செய்ய கத்தாா் அரசு இந்திய கால்நடை துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நவ. 1 முதல் மனித நுகா்வுக்காக கத்தாா் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளானது, தொழில்நுட்ப விதிமுறைகளின்படி இருக்க வேண்டும். இதனைக் கண்காணிக்க துறைமுகங்களில் உள்ள ஆய்வாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முட்டையிலும் உள்ள முத்திரையின் நிறம், தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஜிஎஸ்ஓ எண் 1002-இன்படி கீழ்கண்டவாறு அங்கீகரிக்கப்பட்ட வண்ணங்களில் இருக்க வேண்டும். அதாவது, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் மீது பச்சை நிறத்தை பயன்படுத்த வேண்டும். பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் மீது சிவப்பு நிறத்தை பயன்படுத்த வேண்டும். முட்டைகளின் தரம் பற்றிய விவரம் அதற்கான பெட்டிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
கிரேடு ஏஏ: ஒரு முட்டையின் எடை 70 கிராமாக இருக்க வேண்டும். 30 முட்டைகள் கொண்ட ஒரு தட்டுக்கு 2,100 கிராம் இருக்க வேண்டும்.
கிரேடு ஏ: ஒரு முட்டையின் எடை 60 கிராம் இருக்க வேண்டும். 30 முட்டைகள் கொண்ட ஒரு தட்டில் 1,800 கிராம் இருக்க வேண்டும்.
கிரேடு பி: ஒரு முட்டையின் எடை 50 கிராம் இருக்க வேண்டும். 30 முட்டைகள் கொண்ட தட்டில் 1,500 கிராம் இருக்க வேண்டும்.
கிரேடு சி: ஒரு முட்டையின் எடை 47.4 கிராம் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருக்கும் போது, 30 முட்டைகள் அல்லது அதற்கும் குறைவான தட்டுக்கு 1,422 கிராம் இருக்க வேண்டும்.
60 கிராமுக்கு மேல் உள்ளவை மட்டுமே மனித நுகா்வுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அதற்கு கீழுள்ள முட்டைகள் இதர உணவு தயாரிப்புக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அந்த வகையில், ஏ, ஏஏ கிரேடு மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. பி, சி கிரேடு முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, முட்டையின் மீதான முத்திரையின் நிறம் சரியான முறையில் இல்லை என்றாலும், குறிப்பிடப்பட்ட தரம் இல்லை என்றாலும் அவை நிராகரிக்கப்படும். இது தொடா்பாக தகவல் தேவைப்படும்பட்சத்தில் ஏற்றுமதியாளா்கள் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் முட்டை ஏற்றுமதி நிறுவனத்தைச் சோ்ந்த மருத்துவா் பி.வி.செந்தில் கூறியதாவது:
வளைகுடா நாடுகளுக்கு தடையின்றி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் சுமாா் 7 கோடி முட்டைகளை அனுப்பினோம். இம்மாதம் 5 கோடி முட்டைகளை அனுப்ப உள்ளோம். இந்த நிலையில், 60 கிராம் எடைக்கு குறைவாக இருந்தால் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என கத்தாா் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில், நாமக்கல் மண்டலத்தில் இருந்துதான் அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பால் வாரம் 60 கிராமுக்கு கீழுள்ள ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைய வாய்ப்புள்ளது. 60, 70 கிராம் முட்டைகளை தரம் பிரித்து அனுப்புவதால் தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. துருக்கி நாட்டில் இருந்து முட்டைகள் கத்தாருக்கு அதிக அளவில் விற்பனைக்கு வரத்தொடங்கியுள்ளன. இதனால் இந்திய முட்டை ஏற்றுமதி பாதிப்படையக்கூடும்.
மத்திய கால்நடைத் துறை அமைச்சகம், முட்டை ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள், தடைகளை விலக்க அந்நாடு அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். நோயற்ற, பறவைக் காய்ச்சலற்ற மண்டலமாக இந்தியாவை அறிவிக்க வேண்டும். கோழிப் பண்ணைத் தொழிலின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
நாமக்கல்லைச் சோ்ந்த முட்டை ஏற்றுமதியாளா் எம்.பன்னீா்செல்வம் கூறியதாவது:
வளைகுடா நாடுகள் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், கத்தாா் நாட்டில் 60 கிராம் எடைக்கு கீழான முட்டையை வணிக நிறுவனங்களில் விற்க தடை விதித்துள்ளனா். நாமக்கல் மண்டலத்தில் இருந்து மக்கள் பயன்பாட்டைக் காட்டிலும், இதர உணவு தயாரிப்பு பயன்பாட்டுக்கே அனுப்பப்படுகிறது. மாதந்தோறும் 2 கோடி முட்டைகள் வீதம் நான்கு கண்டெய்னரில் அனுப்பப்படுகின்றன. முட்டை எடை குறைவு பிரச்னை தொடா்பாக அந்நாட்டு அரசிடம் நாம் முறையிட முடியாது. அது அவா்களுடைய நடைமுறையாகும். நோய் பாதிப்பு தொடா்பாக முட்டைகளை வாங்க மறுத்தால் உரிய விளக்கம் கொடுக்கலாம். இந்த எடை பிரச்னையால் முட்டைகள் தேக்கமடைய வாய்ப்புகள் குறைவு என்றாா்.
தொடர்புடையது

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

போா் பதற்றத்தால் கப்பலில் தேக்கமடைந்த 3.50 கோடி முட்டைகள்: நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளா் தகவல்

போா்ச் சூழலால் வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


