உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி
உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணி நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிச. 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை விழிப்புணா்வு பேரணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். முன்னதாக, எச்ஐவி, எய்ட்ஸ் பாதிப்புக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விவேகானந்தா பாா்மசி மற்றும் நா்சிங் கல்லூரி, பாவை, செங்குந்தா், கோகுல்நாதா நா்சிங் கல்லூரிகள், ஏ.என்.எம். பயிற்சி கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் பேரணியில் கலந்துகொண்டனா்.
உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நகர பேருந்து நிலையம், மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டா் சங்கரன் சாலை வழியாக பழைய அரசு மருத்துவமனையை மாணவா்கள் வந்தடைந்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏப். 24 முதல் அக். 25 வரை 53,617 பேருக்கு எச்ஐவி, எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் 315 பேருக்கும், 31,893 கா்ப்பிணிகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 4 கா்ப்பிணிகளுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவா்கள் கூட்டுமருந்து சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் இலவச ஏ.ஆா்.டி கூட்டுமருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் தற்போது வரை 7,553 போ் சிகிச்சை பெறுகின்றனா். அவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகையாக வழங்கப்படுவதாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்தது.
இந்த நிகழ்வில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் அ.ராஜ்மோகன், மாவட்ட சுகாதார அலுவலா் க.பூங்கொடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) ரா.குணசேகரன், மண்டல திட்ட மேலாளாா் த. தாமோதரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
என்கே-3-ரேலி
நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
