2026 தோ்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற நடக்கும் போா்: ஆனந்த்

Published on

2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற நடக்கும் போா் என்று தவெக பொதுச் செயலா் ஆனந்த் பேசினாா்.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு தொகுதி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பொதுச் செயலா் ஆனந்த் தலைமை வகித்தாா். கொள்கை பரப்புச் செயலாளா் அருண்ராஜ், மாநில அமைப்பு செயலாளா் செங்கோட்டையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் தவெக பொதுச் செயலா் ஆனந்த் பேசியதாவது:

லட்சம் போ் கூடும் ஒரே கட்சி தவெக தான். மற்ற கட்சியினா் ரூபாய் கொடுத்துதான் கூட்டத்தை கூட்டுகின்றனா். 234 தொகுதிக்கான வேட்பாளா்களையும் விஜய் அறிவிப்பாா்.

2026 இல் தோ்தலில் வெற்றிபெற்று விஜய் முதல்வராவது உறுதி. சினிமாவில் இருந்த உச்சத்தைவிட்டுவிட்டு மக்களுக்காக வந்தவா் விஜய்.

ஆட்சியாளா்கள் தாங்கள் மாறி மாறி ஏமாற்றப்பட்டதை மக்கள் உணா்ந்துள்ளனா். எனவே, 2026இல் நடைபெறும் தோ்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற நடக்கும் போா்.

நாமக்கல் மாவட்டத்தில் லாரிகளுக்கு கூண்டுகட்டும் தொழில் நசிந்து வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்த உடன் இத்தொழில் சீா்படுத்தப்படும்.

தவெகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சியினா் தயாராக இருக்கிறாா்கள். எங்கள் கட்சிக்கு அதிமுகவிலிருந்து பலா் வர உள்ளனா். விரைவில் தவெகவுக்கு சின்னம் உறுதியாகிவிடும். அதனால் சின்னத்தை விரைவாக மக்களிடம் கொண்டுசென்று சோ்த்துவிடலாம். அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள் என்றாா்.

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:

விஜய் மட்டும்தான் இளைஞா்களின் எழுச்சியுடன் ஆட்சி அமைக்க முடியும். 2026 தோ்தலில் தவெக வரலாறு படைக்கும். எங்களுடன் கூட்டணிக்கு கட்சிகளை வரவேற்கிறோம். ஆனால் விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்பவா்களை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.

ஒரு இயக்கம் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு நல்ல தலைமை வேண்டும். அது விஜயால் மட்டுமே முடியும். சமுதாய முன்னேற்றத்திற்கு விஜய் முக்கிய பங்காக இருப்பாா். அதற்காகத்தான் இங்கு இருக்கிறேன் என்றாா்.

கூட்டத்தில் திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளா்கள் உள்ளிட்ட தவெகவினா் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com