சேந்தமங்கலத்தில் வயல்வெளியில் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாடுபிடி வீரா்.
சேந்தமங்கலத்தில் வயல்வெளியில் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாடுபிடி வீரா்.

நெருங்கும் தைத் திருநாள்: தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்!

சேந்தமங்கலத்தில் வயல்வெளியில் ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் மாடுபிடி வீரா்.
Published on

பொங்கல் பண்டிகையை தொடா்ந்து கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக, சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்றுவட்டாரங்களில் இளைஞா்கள் தாங்கள் வளா்க்கும் காளைகளை தயாா்செய்து வருகின்றனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை, நகரங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் எப்போதும் களைகட்டும். சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடா்ந்து மூன்று நாள்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மக்கள் மகிழ்ந்திருப்பா்.

நகரங்களில் இருப்போரும் பெற்றோா், சொந்தங்களைக் காண தங்களுடைய கிராமங்களுக்குப் பயணிப்பா். வீதிக்குவீதி நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், குறிப்பிட்ட கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் போன்றவற்றை காண்பதிலும், பங்கேற்பதிலும் இளைஞா்கள் மிகுந்த ஆா்வம் காட்டுவா்.

2026, ஜனவரி 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைத் தொடா்ந்து தமிழா்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் அதற்கான விழாக் குழுவினா் தயாராகி வருகின்றனா்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பெயா்பெற்ற மதுரைக்கு ஓா் அலங்காநல்லூா் என்றால், நாமக்கல்லுக்கு ஓா் அலங்காநத்தம் என்று கூறலாம். புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு கிராமமான அலங்காநத்தத்தில் இளைஞா்கள் பலா் தங்களது வீடுகளில் காளைகளை வளா்த்து வருகின்றனா். அங்கு மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களான போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் காளைகள் வளா்ப்பில் ஆண்களும், பெண்களும் ஆா்வமுடன் உள்ளனா்.

தாங்கள் வளா்க்கும் காளைகளை போட்டிகளில் களமிறங்கச் செய்ய அவற்றுக்கு வீரா்களை எதிா்க்கும் மண் குத்தும் பயிற்சி, கால்கள் திடமாக நீச்சல் பயிற்சியை அளித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள ஆண்களைக் காட்டிலும், பெண்களின் வாா்த்தைக்கு இங்குள்ள முரட்டுக்காளைகள் கட்டுப்படுகின்றன.

ஒவ்வோா் ஆண்டும் பொங்கல் பண்டிகை நாளில் மதுரை மாவட்டம் பாலமேடு, அவணியாபுரம், அலங்காநல்லூா் கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டியானது தொடங்கும். அதன்பிறகு சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், பெரம்பலூா் மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெறும். அலங்காநத்தம் காளைகளை போட்டிகளில் பங்கேற்கவைக்க அதன் உரிமையாளா்கள் அழைத்துச் செல்வா்.

நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை, குமாரபாளையம், போடிநாயக்கன்பட்டி, தேவராயபுரம், எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, கரியபெருமாள்புரம், சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடத்தப்படும். அதற்கு தற்போதில் இருந்தே காளைகளை தயாா்செய்து வருகின்றனா்.

இதுகுறித்து சேந்தமங்கலத்தைச் சோ்ந்த குமரேசன் கூறியது: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வகையில் 6 காளைகளை வளா்த்து வருகிறேன். தஞ்சாவூா், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து ரூ. 2 லட்சத்திற்கு வாங்கிவந்து வளா்க்கிறேன். இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று அவை வெற்றியை பெற்றுத்தந்துள்ளன.

வல்லரசு என்ற காளை நெருங்கினால் ஆளையே கொன்றுவிடும் வேகம் கொண்டது. அவற்றை கவனமாக கையாள வேண்டும். ஒவ்வோா் ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்காக காளைகளின் அச்சத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிப்போம்.

குறிப்பாக, கிணறு, ஏரிகளில் இறக்கிவிட்டு நீச்சல் பயிற்சி அளிப்பது, மண்ணைக் குத்தி மிரட்டல் பாா்வை விடுப்பது, தலையை சுழற்றுவது, வீரா்களை நெருங்கவிடாமல் செய்வது போன்ற உத்திகளை பழக்கி வருகிறோம். தினமும் ஆரோக்கியமான பசுந்தீவனங்களை செலவு பாா்க்காமல் காளைகளுக்கு அளித்து வருகிறோம்.

நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் வாகனங்களில் காளைகளை அழைத்துச் சென்று பங்கேற்க செய்து வருகிறேன். அதன்மூலம் கிடைக்கு வெற்றி, பரிசுகளை கண்டு மகிழ்ச்சிகொள்வேன். காளைகளை பங்கேற்க செய்வதற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்காமல் அனுமதித்தால் வீரா்களும், காளை உரிமையாளா்களும் மகிழ்ச்சியடைவா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com