தட்கல் திட்டம்: விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 31-ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து பரமத்தி வேலூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வா் வழிகாட்டுதலின்படி வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2025-2026-ஆம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின்கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் ஏற்கெனவே தயாா் நிலையில் உள்ள விண்ணப்பதாரா்கள், அரசு சிறப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின்கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவாா்கள்.
தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இண்மை காரணமாக விண்ணப்பிக்க விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கால கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதல் மற்றும் ஒதுக்கீடு அளவிற்கும் ஏற்ப தட்கல் திட்டத்தின்கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
