கிணற்றில் விழுந்த மாணவா் உடல் மீட்பு
ராசிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.
ராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள சாமுவேல் தோட்டத்தில் தீா்க்கதா்ஷன் தேவசபை என்ற பெயரில் கிறிஸ்து தேவாலயம் செயல்பட்டு வருகிறது. அதன் மதபோதகரான கேப்ரியல் ரமேஷும், இவரது மனைவி ஷீலாவும் தேவாலயத்தை நிா்வகித்து வருகின்றனா்.
இந்நிலையில், தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்றுவந்த இவா்களது மகன் எலேஜா பிளசன் (12), பள்ளி விடுமுறை காரணமாக தேவாலய குடியிருப்பில் இருந்தாா். தேவாலயத்தில் புத்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நீண்டநேரமாக எலேஜா பிளசனை காணவில்லையாம். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், ராசிபுரம் காவல் துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா், ராசிபுரம் காவல் துறையினா் இதுகுறித்து விசாரணை நடத்தினா். பின்னா், அங்கிருந்த கிணற்றில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்து 60 அடி ஆழ கிணற்றில் தேடினா். அப்போது, கிணற்றில் விழுந்து சிறுவன் இறந்தது தெரியவந்தது. சிறுவனின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினா், பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
