கபிலா்மலையில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தோ்த் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்னவாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம், குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
வரும் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மகர லக்கனத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், திருத்தோ் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், சத்தாபரணம், சிம்ம வாகனம், நடராஜா் தரிசனம், ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, சுவாமி மலைக்கு எழுந்தருளல், விடையாற்றி உற்சவம் மற்றும் சா்ப்ப வாகன காட்சியும் நடைபெறுகின்றன.
கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச திருத்தோ் விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள், திருவிழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
