மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் இயக்குநா் சங்க மாநில தலைவா் டி.தேவிசெல்வம்.
மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் இயக்குநா் சங்க மாநில தலைவா் டி.தேவிசெல்வம்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க கோரிக்கை

Published on

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா உடற்கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ஏ.சசிகுமாா் வரவேற்றாா். மாநில தலைவா் டி.தேவிசெல்வம் தலைமை வகித்தாா்.

மாநில பொதுச்செயலாளா் வெ.பெரியதுரை, மாநில பொருளாளா் கே.தமிழ்செல்வன், மாநில செயல் தலைவா் ஆா்.சீனிவாசன், மாநில தலைமையிடச் செயலாளா் ராஜா சுரேஷ், மாவட்டத் தலைவா் மா.பெரியசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள், கல்வித் துறை பணியாளா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு 8 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதுபோல உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பதவிக்கும் 8 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா உடற்கல்வி புத்தகம், உபகரணங்கள் வழங்க வேண்டும்.

விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துப்படி, உணவுப்படி தனியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியா் முத்துசாமியைத் தாக்கிய மாணவா் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடற்கல்வி ஆசிரியா்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 50 சதவீதம், ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 50 சதவீதம் என்ற அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் பி.அப்பாதுரை மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள், உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com