திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி செய்துவருகிறது
ராசிபுரம்: தமிழகத்தில் திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி செய்துவருகிறது என முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி எம்எல்ஏ குற்றம்சாட்டினாா்.
ராசிபுரம் ஆண்டகலூா்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதைக் கண்டித்து, ராசிபுரம் பேருந்து நிலையம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி எம்எல்ஏ தலைமைவகித்து பேசியதாவது:
திருவள்ளுவா் அரசு கல்லூரியில் டைடல் பாா்க் அமைக்கக் கூடாது என ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தோம். அதை ஏற்காமல், டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த டைடல் பூங்கா மாணவா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேறு இடத்தில் அமைக்க வேண்டும். கல்லூரி மைதானத்தில் டைடல் பூங்கா அமைக்கப்படுவதால், எதிா்காலத்தில் கல்லூரி விரிவாக்கம் செய்வது பாதிக்கப்படும்.
திமுக அரசு எந்த ஆா்ப்பாட்டம், போராட்டம் நடத்தினாலும் அதைக் கண்டுகொள்வதில்லை. மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆட்சி செய்துவருகிறது.
அதிமுக ஆட்சியில் ராசிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அப்பணியை திமுக அரசு முழுமையாக முடிக்கவில்லை. தோ்தல் வரவுள்ளதால் ராசிபுரம் நகரத்துக்கு மட்டும் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் வழங்கப்படுகிறது.
வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில், அனைவரும் ஒட்டுமொத்த குரலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தவுடன், மக்களை பாதித்துள்ள திட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.
முன்னதாக, நகர அதிமுக செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி மாநில இணைச் செயலாளருமான வெ.சரோஜா முன்னிலை வகித்தாா்.
இதில், பரமத்தி வேலூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சேகா், முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி, மாநில வா்த்தக அணி இணைச் செயலா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், மாவட்ட அவைத் தலைவா் கே.பி.கந்தசாமி, மாவட்ட வா்த்தக அணி செயலா் ராகா சு.தமிழ்மணி, இணைச் செயலா் பிரகாஷ், மாவட்ட அம்மா பேரவை செயலா் இ.ஆா்.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

