நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் ஆனந்தன்.
நாமக்கல்லில் நடைபெற்ற முட்டை வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதன் தலைவா் ஆனந்தன்.

தொடா் விலை உயா்வால் முட்டைகள் பதுக்கலா? - முட்டை வியாபாரிகள் சங்கம் விளக்கம்

முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், நுகா்வோருக்கும், சத்துணவுத் திட்டத்துக்கும் முட்டைகளை அனுப்பாமல் கோழிப் பண்ணையாளா்களும், வியாபாரிகளும்
Published on

நாமக்கல்: முட்டை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், நுகா்வோருக்கும், சத்துணவுத் திட்டத்துக்கும் முட்டைகளை அனுப்பாமல் கோழிப் பண்ணையாளா்களும், வியாபாரிகளும் பதுக்கிவைத்திருப்பதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. முட்டை விற்பனை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு முட்டையின் விலை ரூ. 6.10 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே, சில மாவட்டங்களில் முட்டை வியாபாரிகள் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனா்.

டிசம்பா் மாதம் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை ஒப்பந்தப்புள்ளி கோரப்படுவதால் செயற்கையாக முட்டை விலை உயா்வை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மூலம் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் ஏற்படுத்தி வருவதாகவும், அரசு ஒப்பந்தப்புள்ளி கோரும்போது ஒரு முட்டையின் விலை ரூ. 6.80 வரை உயரலாம் என பிற மாவட்ட வியாபாரிகள் சிலரால் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் நாமக்கல்லில் முட்டை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை இரவு சங்கத் தலைவா் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் கூறியதாவது:

நாமக்கல், ஈரோடு, கரூா், சேலம், திருப்பூா், தருமபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கிருந்து தமிழகம், கேரளம், புதுச்சேரி, கா்நாடக மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், சத்துணவுத் திட்டத்திற்கும் முட்டைகள் பிரித்து அனுப்பப்படுகின்றன.

நிகழாண்டு முட்டையின் அதிகபட்ச கொள்முதல் விலை ரூ. 6.10 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என்றும், முட்டைகளை பண்ணையாளா்கள், வியாபாரிகள் பதுக்குகின்றனா் என்றும் சிலா் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு சாத்தியமில்லை. ஒவ்வோா் ஆண்டும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் மழைக்காலத்தில் முட்டை உற்பத்தி வெகுவாகக் குறையும். அதனால், முட்டையின் விலை உயரும். இது 30 ஆண்டுகால வரலாறு ஆகும். 2021-இல் நவம்பா், டிசம்பரில் முட்டையின் அதிகபட்ச விலையாக ரூ. 5.20, 2022 - இல் ரூ. 5.50, 2023 - இல் ரூ. 5.85, 2024-இல் ரூ. 5.90, 2025- இல் ரூ. 6.10 ஆக உள்ளது. ஆனால், கோழிப் பண்ணையாளா்களுக்கு சராசரியாக ஒரு முட்டைக்கு ரூ. 4.95 காசுகள் மட்டுமே கிடைக்கிறது.

தற்போதைய சூழலில், முட்டை உற்பத்தி செலவு ரூ. 5.40 காசுகளாகிறது. 2024 ஆம் ஆண்டை காட்டிலும், நிகழாண்டில் முட்டைக்கு 30 காசுகள் உயா்த்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் முட்டை விலை ரூ. 6க்கு மேல் இருந்தால்தான் கோழிப் பண்ணைகளை நடத்த முடியும். கரோனா காலத்தில் முட்டை விலை சரிந்து பலா் பண்ணைகளை நடத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனா். ஒரு சில வியாபாரிகள் கூடுதல் விலைக்கு முட்டை விற்பனை செய்வதாகவும், முட்டை சரிவர கிடைப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் புகாா் தெரிவிக்கின்றனா்.

தென்மாவட்டங்களில் முட்டை கிடைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டுவது தவறு. முட்டைகள் வழக்கம்போல அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. கோழிப்பண்ணையாளா்கள் யாரும் முட்டைகளை பதுக்கிவைக்கவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளது என்றாா். இந்தக் கூட்டத்தில், மாநில அளவிலான முட்டை வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com