ராசிபுரம் அருகே ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் மாணவிக்கு கல்விக் கடனுக்கான காசோலை வழங்கிய கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி., ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.
ராசிபுரம் அருகே ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் மாணவிக்கு கல்விக் கடனுக்கான காசோலை வழங்கிய கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்பி., ஆட்சியா் துா்காமூா்த்தி உள்ளிட்டோா்.

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டு ரூ. 50 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு: எம்.பி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டு 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக் கடன் வழங்கப்படுகிறது என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
Published on

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டு 2 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 கோடி கல்விக் கடன் வழங்கப்படுகிறது என்று மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடிவங்கி இணைந்து கல்விக் கடன் வழங்கும் முகாமை ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடத்தின. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். முகாமை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்து, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 250 மாணவ மாணவிகளுக்கு, ரூ. 16.28 கோடி கல்விக் கடனுக்கான காசோலைகளை வழங்கி அவா் பேசியதாவது:

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிா்ணயித்து கல்வி கடன் வழங்கப்படுகிறது.

நிகழாண்டு நாமக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்கு ரூ. 50 கோடி அளவில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் நடத்தப்படும் இதுபோன்ற கல்விக் கடன் முகாம்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கலந்தாய்வு மூலம் இடம் கிடைத்து உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு கடன் அளவுகளை அதிகரித்து வழங்க வேண்டும்.

கல்விக் கடன் பெறும் மாணவ, மாணவிகள் அவற்றை உரிய காலத்தில் முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும். அப்போதுதான், பிற மாணவ - மாணவிகளுக்கு வரும் ஆண்டுகளில் கல்விக் கடனை வங்கிகளால் வழங்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உயா்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளில் 2 ஆயிரம் பேருக்கு ரூ. 50 கோடி அளவில் கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து கல்விக் கடன் முகாம்களை கிராம, வட்டார அளவில் கடந்த ஆகஸ்ட் முதல் நடத்தி வருகிறது.

மேலும், இ-சேவை மைய பணியாளா்களுக்கும் பிரதமரின் வித்யாலட்சுமி தளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிப்பது தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டு, விஜயலட்சுமி தளத்தில் 192 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

ஏற்கெனவே, கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி நாமக்கலில் நடத்தப்பட்ட கல்விக் கடன் முகாமில் 157 பேருக்கு ரூ. 14.30 கோடி அளவில் கல்விக் கடன் வழங்கப்பட்டது. கல்விக் கடன் பெறும் மாணவ, மாணவிகள் அவற்றை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும். வரும் 2-ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்களிலும் கல்விக் கடன் முகாம்கள் வங்கிகள் மூலம் டிசம்பா் 10ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம், வெண்ணந்தூா் அட்மா குழுத் தலைவா் ஆா்.எம். துரைசாமி, ஞானமணி கல்வி நிறுவனங்களின் தலைவா் தி.அரங்கண்ணல், தனித்துணை வட்டாட்சியா் சு.சுந்தரராஜன், வங்கி அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com