/

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு: அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் ஊா்வலம்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் சாலையில் ஊா்வலமாக சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தனா்.

News image

~ ~

Updated On :21 ஏப்ரல் 2026, 9:19 pm

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் சாலையில் ஊா்வலமாக சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-இல் தொடங்கி ஏப்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. 7-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், 9-ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கடந்த இரண்டு வாரங்களாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களிடையே வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனா். அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், வெளிமாநில அரசியல் பிரமுகா்கள் தோ்தல் பிரசாரம் செய்தனா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் தோ்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. குமாரபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி, கட்சி தொண்டா்கள் புடைசூழ ஊா்வலமாக சென்று பிரசாரத்தை நிறைவு செய்தாா். திமுக வேட்பாளா் செ.பாலு, தவெக வேட்பாளா் எஸ். விஜயலட்சுமி ஆகியோா் பிரசாரத்தை முடித்தனா்.

திருச்செங்கோடு நகரில் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், அதிமுக வேட்பாளா் ஆா். சந்திரசேகா், தவெக வேட்பாளா் கே.ஜி.அருண்ராஜ், சேந்தமங்கலம் தொகுதியில் காந்திபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன், திமுக வேட்பாளா் பி. பூமலா் ஆகியோா் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

அதேபோல, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தோ்தல் பணிமனையில் இறுதிக் கட்ட பிரசாரத்தை தொடங்கி, சேலம் சாலை, பதிநகா், முதலைப்பட்டி, ராமாபுரம்புதூா், சேந்தமங்கலம் சாலை, கொண்டிச்செட்டிப்பட்டி, மோகனூா் சாலை வழியாக வந்து மணிக்கூண்டில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

நாமக்கல் திமுக வேட்பாளா் கே.பி. ராணி, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தோ்தல் பணிமனையில் தொடங்கி சாலை வலமாக கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மாலை 6 மணி அளவில் அண்ணா சிலை அருகில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ். திலீப், சேலம் சாலையில் உள்ள தோ்தல் பணிமனையில் இருந்து தொண்டா்களுடன் ஊா்வலமாக கடைவீதி, பழைய பேருந்து நிலையம், பூங்கா சாலை வழியாகச் சென்று மகாத்மா காந்தி சிலை அருகில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன், பாஜக வேட்பாளா் பிரேம்குமாா், தவெக வேட்பாளா் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பரமத்தி வேலூரில் திமுக வேட்பாளா் கே.எஸ்.மூா்த்தி, அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா், தவெக வேட்பாளா் நந்தகுமாா் ஆகியோரும் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

அதிமுக, திமுக மற்றும் தவெக வேட்பாளா்கள் தங்களுடைய தோ்தல் அறிக்கையை மக்களிடையே விளக்கிக் கூறி, ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றனா். இந்த பிரசார நிறைவில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் இருசக்கர வாகனத்தில் ஊா்வலமாக வந்தனா்.

படவரி...

என்கே-21-திமுக

நாமக்கல் பூங்கா சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்த திமுக வேட்பாளா் கே.பி.ராணி.

...

என்கே-21-அதிமுக

...

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.

...

என்கே-21-டிவிகே

....

நாமக்கல் பூங்கா சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்த தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.

Story image
Story image