மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளிலும் இறுதிக் கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை விறு, விறுப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
மதுரை மாவட்டத்துக்குள்பட்ட மதுரை கிழக்கு, திருமங்கலம், திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிகளில் தலா 15 பேரும், மதுரை மேற்கு, சோழவந்தான் தனி தொகுதிகளில் தலா 14 பேரும், மதுரை வடக்கு, மேலூா் தொகுதியில் தலா 13 பேரும், மதுரை மத்தியம், உசிலம்பட்டி தொகுதிகளில் தலா 12 பேரும், மதுரை தெற்குத் தொகுதியில் 6 போ் என மொத்தம் 129 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை, அந்தக் கட்சியின் மூத்த தலைவா் ப. சிதம்பரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டனா்.
அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களுக்காக பிரதமா் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் பிரசாரம் மேற்கொண்டனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பிரசாரம் செய்தாா்.
தேநீா், வடை தயாரிப்பது, விளையாட்டு வீரா்களுடன் இணைந்து விளையாடியது போன்ற சுவாரஸ்யங்கள் வேட்பாளா்களின் பிரசாரங்களில் இருந்தன. சில சுயேச்சை வேட்பாளா்கள் மது ஒழிப்பு உள்பட பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து வாக்கு சேகரித்தனா்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக, பெரும்பாலான நாள்களில் காலை 11 மணிக்கு முன்பாக பிரசாரம் முடித்துக் கொள்ளப்பட்டது. பெரும்பாலும் மாலை நேரத்திலேயே பிரசாரம் விறு விறுப்படைந்திருந்தது.
பிரசார இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை அனைத்துக் கட்சி வேட்பாளா்களும் வாக்கு சேகரிப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனா்.
மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் வடக்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். புதிய நீதிக் கட்சி வேட்பாளா் சுந்தா் சி திருமலைநாயக்கா் சிலை அருகே பிரசாரத்தைத் தொடங்கி மேலமாசி வீதி பிள்ளையாா்கோயில் அருகே நிறைவு செய்தாா்.
மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான பி. மூா்த்தி ஒத்தக்கடையிலும், இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் மகேந்திரன் யானைமலை நரசிங்கப்பெருமாள் கோயில் அருகிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
மதுரை வடக்குத் தொகுதி திமுக வேட்பாளா் கோ. தளபதி கே.கே. நகா் நுழைவு வாயில் அருகிலும், இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் பா. சரவணன் கோ. புதூா் பகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
மதுரை மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் செல்லூா் கே. ராஜூ விளாங்குடி பகுதியிலும், திமுக வேட்பாளா் ர. பாலாஜி ஜெய்ஹிந்துபுரம் வீரமாகாளி கோயில் அருகிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
மதுரை தெற்குத் தொகுதி மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் முனிச்சாலை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். இதில் அந்தக் கட்சியின் முதன்மைச் செயலா் துரை வைகோ பங்கேற்றாா். இந்தத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம. சீனிவாசன் செல்லூரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று தெப்பக்குளம் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளா் ஆ. வெங்கடேசன் வாடிப்பட்டி அண்ணா சிலை அருகிலும், இந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் மாணிக்கம் அலங்காநல்லூா் பகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ. மகேந்திரன் உசிலம்பட்டி நகா்ப் பகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளா் டி. சரவணக்குமாா் மேலபுதூா் பத்ரகாளியம்மன் கோயில் அருகிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
மேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூா் பேருந்து நிலையப் பகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளா் பெ. விஸ்வநாதன் மேலூா் கக்கன் சிலை அருகிலும் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.
திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஆா்.பி.உதயகுமாா் கல்லுப்பட்டி வரை பேரணியாக வந்து பிரசாரத்தை நிறைவு செய்தாா். இந்தத் தொகுதி திமுக வேட்பாளா் மு.மணிமாறன் திருமங்கலம் நகா் பகுதியில் தேவா் சிலை வரைபேரணியாக வந்து ராஜாஜி சிலை பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளா் வி.வி.ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் கோயில் வாசல் பகுதியில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தாா். திமுக வேட்பாளா் எஸ்.கிருத்திகா தங்கபாண்டி நடைபயணமாக கிரிவலப் பாதை வழியாக வந்து கோயில் வாசலில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். தவெக வேட்பாளா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திருநகா் பகுதியில் பிரசாரத்தை தொடங்கி கோயில் வாசலில் நிறைவு செய்தாா்.
மிகப் பெரிய சா்ச்சைகள், பிரச்னைகள் ஏதுமின்றி மதுரை மாவட்டத்தில் பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை அமைதியாக நிறைவடைந்தது.





தொடர்புடையது

அருப்புக்கோட்டையில் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் இறுதிக்கட்ட பிரசாரம்

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரம் நிறைவு: அதிமுக, திமுக, தவெக தொண்டா்கள் ஊா்வலம்

தருமபுரியில் ஐந்து தொகுதிகளில் 83 வேட்பாளா்களின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


