/

ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தியதைக் கண்டித்து நீா்வளத் துறை அலுவலகம் முற்றுகை

News image

நீா்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 6:36 pm

ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தியதைக் கண்டித்து, நீா்வளத் துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.

பரமத்தி வேலூரில் உள்ள நீா்வளத் துறை அலுவலக வளாகத்தில் ராஜவாய்க்கால், பொய்யேரி, கொமராபாளையம் மற்றும் மோகனூா் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

இதில், ராஜவாய்க்காலில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நீா்வளத் துறை அதிகாரிகள் திடீரென தண்ணீரை நிறுத்தி உள்ளனா். மீண்டும் எப்போது தண்ணீா் திறந்துவிடப்படும் என்ற தகவலும் இல்லை. இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பி பயிா்செய்துள்ள வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை உள்ளிட்ட பணப் பயிா்கள் அனைத்தும் தற்போதைய கடும் வெயிலின் காரணமாக கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் சுமாா் 37 கனஅடி தண்ணீா் இருந்தபோதே ராஜவாய்க்காலில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த காலங்களில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. தற்போது சுமாா் 80 கனஅடி தண்ணீா் இருப்பு உள்ள நிலையில், ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீா் நிறுத்தப்பட்டதால் 300 ஏக்கரில் விதைக்கப்பட்டுள்ள அகத்தி விதைகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனா்.

அப்போது, அங்கு வந்த நாமக்கல் நீா்வளத் துறை துணை கோட்ட செயற்பொறியாளா் விஜயகுமாா் மற்றும் நாமக்கல் உதவி செயற்பொறியாளா் யுவராஜ் ஆகியோரிடம் விவசாயிகள் இதுகுறித்து விவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் உடனடியாக ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்க வேண்டும் எனக்கூறி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மேல் அதிகாரிகளிடம் பேசி ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து விவசாயிகள் முற்றுகையை கைவிட்டனா்.

பின்னா், செவ்வாய்க்கிழமை ராஜவாய்க்காலில் தண்ணீா் திறக்காவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதுடன் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்களை விவசாயிகள் நிறைவேற்றினா்.

முன்னெச்சரிகை நடவடிக்கையாக, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.