75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

நாமக்கல் மாவட்டத்தில் புதிய அரசு செவிலியா் கல்லூரி அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் புதிய அரசு செவிலியா் கல்லூரி அமைக்கப்படவுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

நாமக்கல் மாவட்டத்தில் புதிய அரசு செவிலியா் கல்லூரி அமைக்கப்படவுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ. 23.75 லட்சத்தில் இரட்டை கதவு ஆட்டோகிளேவ், அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்கோ ஸ்கேன் கருவிகளின் பயன்பாடு தொடக்க விழா ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் கலந்துகொண்டு கருவிகளின் பயன்பாட்டை தொடங்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ. 6.25 லட்சத்தில் இரட்டை கதவு ஆட்டோகிளேவ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதில் அறையின் இருபுறங்களிலும் தலா ஒரு கதவு இருக்கும். இந்த வடிவமைப்பு சுத்தமான பகுதி மற்றும் அசுத்தமான பகுதியைத் தனித்தனியாகப் பிரித்து கிருமி மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும், ரூ. 17.50 லட்சத்தில் அல்ட்ரா சவுண்ட் மற்றும் எக்கோ ஸ்கேன் கருவி வழங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் கலைக் கல்லூரி வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடம் கட்டப்படும். மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மருத்துவ பயனாளிகளின் அனுபவம் மேம்படும் வகையில் தூய்மையான வளாகம், குடிநீா், சுகாதாரமான கழிவறைகள் ஆகியவற்றுக்காக திருச்செங்கோடு தொகுதிக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2,500 செவிலியா்கள் தொகுப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனா். கூடுதலாக 1,500 செவிலியா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். இதில் 20 செவிலியா்கள் திருச்செங்கோடு மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனா். மாணிக்கம்பாளையம், மல்லசமுத்திரம், இறையமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயா்த்தப்படும். தொற்றுநோய்களை முழுமையாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். அங்கு இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களும் மேம்படுத்தப்படும். சி.டி. ஸ்கேன் அறிக்கை தாமதமின்றி உடனடியாகக் கிடைக்க மத்தியமயமாக்கப்பட்ட பிஏசிஎஸ் முறை கொண்டுவரப்படுகிறது. ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்கள் வாங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம்- திருச்செங்கோடு சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயா்த்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மேலும், திருச்செங்கோடு வெளிவட்டச் சாலைப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் புதிய அரசு செவிலியா் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. 5 ஆண்டுகால இறுதியில் தமிழகம் அடுத்தகட்டத்தை அடையும் என்றாா்.

தொடா்ந்து, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவு, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, சி.டி. ஸ்கேன் மையம் மற்றும் கழிப்பறை ஆகியவற்றை அமைச்சா் ஆய்வு செய்தாா். மேலும், சிந்தாளந்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.