முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின். கோப்புப் படம்

நாமக்கல் பால் பண்ணை, ராசிபுரம் குடிநீா்த் திட்டம்: காணொலி வாயிலாக முதல்வா் இன்று தொடங்கிவைக்கிறாா்

நாமக்கல் மாவட்டத்தில் அதிநவீன பால் பண்ணை, புதிய குடிநீா்த் திட்டங்கள் என ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (பிப். 5) தொடங்கிவைக்கிறாா்.
Published on

நாமக்கல் மாவட்டத்தில் அதிநவீன பால் பண்ணை, புதிய குடிநீா்த் திட்டங்கள் என ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை காணொலி வாயிலாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (பிப். 5) தொடங்கிவைக்கிறாா் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கோரி மக்கள் பிரதிநிதிகள், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை முதல்வா் தொடங்கிவைத்தாா். அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் பல்வேறு திட்டங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

அந்த வகையில் ரூ. 854 கோடி மதிப்பில் ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவடைந்து வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ராசிபுரம், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், ராசிபுரம் நகராட்சி உள்பட 523 கிராமங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்கும்.

அதேபோல ரூ. 100 கோடி மதிப்பில் நாமக்கல்- மோகனூா் சாலையில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பால் பண்ணை திறக்கப்படுகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டா் பால் பதப்படுத்த முடியும். இதன்மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள், 5 லட்சம் நுகா்வோா்கள் பயனடைவா். இதுவரை சேலம் ஆவின் ஒன்றியத்திற்கு, பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்காக லிட்டருக்கு ரூ. 3.50 செலுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் இப்பணியை நாமக்கல் ஆவின் நிா்வாகம் மேற்கொள்ளும்.

மேலும், மோகனூா் பேரூராட்சியில் ரூ. 23 கோடியில் தனி குடிநீா்த் திட்டம் தொடங்கிவைக்கப்படுகிறது. ராசிபுரம் அருகே புதுப்பட்டியில் இருந்து கடமலை வரை ரூ. 34 கோடியில் அமைக்கப்பட்ட 10 கி.மீ சாலையும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இந்த சாலை திட்டம் போதமலை பகுதி பழங்குடியின மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக முதல்வா் தொடங்கிவைக்கிறாா். தொடா்ந்து ராசிபுரம் புதிய குடிநீா்த் திட்டப் பணிகள் தொடக்க விழா ராசிபுரம்-ஆத்தூா் சாலை கோனேரிப்பட்டியில் காலை 10 மணிக்கும், அதிநவீன பால்பண்ணை தொடக்க விழா நாமக்கல்- மோகனூா் சாலை கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் 11 மணிக்கும், மோகனூா் தனிக்குடிநீா் திட்டப் பணிகள் காலை 11.30 மணியளவில் மோகனூா் பேரூராட்சி அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

இன்னும் ஓரிரு நாள்களில் புதுச்சத்திரத்தில் சென்னை மாகாண முதல்வா் டாக்டா் சுப்பராயன் நினைவு மண்டபம் திறப்பு, சேந்தமங்கலம், எருமப்பட்டி கூட்டு குடிநீா்த் திட்டம், கொல்லிமலை வான்பூங்கா, நைனாமலைக்கான புதிய சாலை உள்ளிட்ட திட்டங்களும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.

Dinamani
www.dinamani.com