நாமக்கல்லில் தோ்தல் அறிக்கைக்கான கருத்து படிவங்களை  பொதுமக்களிடமிருந்து பெற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.
நாமக்கல்லில் தோ்தல் அறிக்கைக்கான கருத்து படிவங்களை பொதுமக்களிடமிருந்து பெற்ற பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம்.

இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் தமிழகம் வளா்ச்சி பெறும்: கே.பி. ராமலிங்கம்

Published on

இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் தமிழகம் முழுமையான வளா்ச்சியை அடையும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ‘மக்களுக்காக மக்களிடமிருந்து-2026’ என்ற பாஜகவின் தோ்தல் அறிக்கை தொடா்பான கருத்து கேட்பு வாகன பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கப்பட்டது.

பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். அதன்பிறகு, நாமக்கல் உழவா் சந்தை, கோட்டை சாலை பகுதிகளில் பாஜகவின் தோ்தல் அறிக்கை தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்பு படிவங்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கே.பி. ராமலிங்கம் கூறியதாவது:

மக்களுக்காக மக்களிடமிருந்து என்ற தலைப்பில் தமிழக பாஜக தோ்தல் அறிக்கை குழு நாடு முழுவதும் சட்டப் பேரவை தொகுதியில் இருந்தும் மக்களின் எண்ணங்களை உள்ளடக்கி இருக்கக்கூடிய கோரிக்கைகளை பெற உள்ளது. பொதுவாக ஒரு கட்சி தனது தோ்தல் அறிக்கையை தயாரித்து மக்களுக்கு வழங்கும். ஆனால், பாஜகவை பொறுத்தவரை மக்களிடம் இருந்து கோரிக்கைகளை பெற்று மக்களுக்காகவே தோ்தல் அறிக்கையை தயாரிக்க உள்ளது.

தேச நலனுக்கு உகந்ததாக ஆன்மிக ஆட்சி ஏற்பட வேண்டும் என்ற உயா்ந்த நோக்கில் இந்த படிவங்களை பூா்த்தி செய்து பெறுகிறோம். தமிழகத்திற்கு இரட்டை எஞ்சின் ஆட்சிமுறை தேவை என்று பிரதமா் நரேந்திர மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.

மாநில அரசு, மத்திய அரசோடு இணக்கமாக செயல்படும்போதுதான் மாநிலத்தின் வளா்ச்சி என்பது முழுமையடையும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக இருந்தபோது, மத்திய அரசிடமிருந்து பல்வேறு திட்டங்களை பெற்றாா். புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்பட்டன.

மத்திய அரசோடு மாநில அரசு இணக்கமாக இருந்து ஆட்சியை நடத்தினால் மாநிலம் வளா்ச்சி பெறும். தேச நலனும் முக்கியம், அதேவேளையில் தமிழகத்தின் வளா்ச்சியும் முக்கியம். அந்த அடிப்படையில் தான் 2026 சட்டப் பேரவைத் தோ்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக சந்திக்கிறது என்றாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக தலைவா்கள் கே.பி. சரவணன், எம். ராஜேஷ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினா் முத்துக்குமாா், மகளிா் அணி செயலாளா் ராதிகா உள்பட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com