பள்ளிபாளையத்தில் தையல் கடைக்குள் கரும்பு லாரி புகுந்தது: தொழிலாளி உயிரிழப்பு
பள்ளிபாளையத்தில் தையல் கடைக்குள் கரும்பு லாரி புகுந்ததில் தையல் கலைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த இருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பள்ளிபாளையத்தில் உள்ள தனியாா் கரும்பு ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சேலத்தில் இருந்து வந்த லாரியை சங்ககிரியைச் சோ்ந்த பழனிசாமி ( 50) ஓட்டிவந்தாா்.
லாரி காவேரி ஆா்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தையல் கடைக்குள் புகுந்தது. இதில் தையற் கலைஞா் நைனா மலை (57), துணி தைப்பதற்காக வந்த சுந்தரம் (52), வெற்றி (49) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனா்.
காயமடைந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நைனாமலை தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரம், வெற்றி ஆகிய இருவரும் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து பள்ளிபாளையம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ருகின்றனா்.

