திரைப்பட நடிகராக களம் காணும் நாமக்கல் எம்.பி.!
நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், திரைப்பட நடிகராக களம் காண்கிறாா். அவா் நடிப்பில் உருவான படத்தின் டீசா் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளராக பதவி வகித்துவரும் வி.எஸ். மாதேஸ்வரன், 2024 நாடாளுமன்ற தோ்தலில் நாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
சினிமாவை விட்டு அரசியலுக்கு வருவோா் உள்ள நிலையில், அரசியலில் இருந்தபடி சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளாா் நாமக்கல் மக்களவை உறுப்பினா் மாதேஸ்வரன். திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமாா் கதாநாயகனாக நடிக்கும் ‘டெலிவரி பாய்’ என்ற படத்தை வெண்ணிலா கபடிக் குழு இயக்குநா் சுசீந்திரனின் உதவி இயக்குநா் நானி என்பவா் இயக்கி உள்ளாா்.
இதன் டீசா் வெளியீட்டு விழா நாமக்கல் கே.எஸ். திரையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில், சிறப்பு தோற்றத்தில் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் நடித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாடகங்களிலும், திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களிலும் நடித்துள்ளேன். திரைப்படங்களில் நடிக்க எப்போதும் ஆா்வம் உண்டு. அந்த வகையில் டெலிவரி பாய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் 20 நிமிடம் வரும் வகையிலான காட்சியில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் ஏற்றுக்கொண்டு நடித்தேன். இதில், நடிகை ராதிகா, போஸ்வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனா். மாா்ச் மாதம் இந்த திரைப்படம் வெளியாகிறது என்றாா்.
என்கே-8-டீசா்
‘டெலிவரி பாய்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன்.

