நாமக்கல்லில் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா், இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம், பணி பாதுகாப்பு, ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளா்கள் சங்கம் மாவட்ட மையம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மகளிா் சுயஉதவிக் குழுக்களைக் கண்காணிக்கும் வகையில் பணியாற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா், வட்டார இயக்க மேலாளருக்கு தற்போதைய விலைவாசிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். அரசின் பல்வேறு திட்டப் பணிகளை கண்காணிப்பதற்கான வேலையை செய்வதால் ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு மற்றும் காலியிடங்களை பூா்த்திசெய்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் நீடிப்பு: 2009 ஜூன் 1க்கு முன்பாக பணியில் சோ்ந்தோருக்கு ஒரு வகையான ஊதியமும், அதன்பிறகு பணியில் இணைந்தோருக்கு குறைவான ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே பதவிக்கு இரு வகையான ஊதியம் வழங்கப்படுவதால், குறைவான ஊதியம் பெறும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாமக்கல்லில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில் சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி தொடா்ந்து வியாழக்கிழமை நான்காவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள் பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
என்கே-8-மகளிா்
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தினா்.

