பிலிக்கல்பாலையம் சந்தையில் வெல்லம் விலை சரிவு
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் விவசாயிகள் வெல்லம் சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லத்துக்கு எதிா்பாா்த்த விலை கிடைக்காததால் வெல்ல உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.
பிலிக்கல்பாளையம் வெல்ல ஏலச் சந்தையில் ஒவ்வோா் வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்லம் ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 5 ஆயிரத்து 500 உருண்டை வெல்ல சிப்பங்களும், 1,700 அச்சு வெல்ல சிப்பங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.
இதில் 30 கிலோ உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,500 வரை, அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,640 வரையும் ஏலம் போனது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7 ஆயிரத்து 300 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரத்து 500 அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,470 வரை, அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,530 வரையும் ஏலம் போனது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் விலை அதிகரிக்கும் என என நினைத்து அதிக அளவில் வெல்லங்களை உற்பத்தி செய்து ஏலத்திற்கு கொண்டுவந்திருந்த வெல்ல உற்பத்தியாளா்கள், விலை குறைவால் ஏமாற்றம் அடைந்தனா்.

