காணும் பொங்கல்: வெறிச்சோடிய பரமத்தி வேலூா் காவிரிக் கரை
பரமத்தி வேலூா்: காணும் பொங்கல் தினத்தில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் பரமத்தி வேலூா் காவிரிக் கரை, நிகழாண்டு மக்கள் யாரும் வராததால் கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தில் பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ள காவிரிக் கரையில் அனைவரும் குடும்பமாக வந்து விளையாடி, உணவு உண்டு பிறகு மாலையில் வீடு திரும்புவா்.
அதேபோல பரமத்தி வேலூா் தெற்கு தெரு பகுதியில் கரிநாள் கட்டளை மாமன், மச்சினன் உறவுடையவா்கள் தோ் சுற்றி வந்து வீதியில் பந்து விளையாடுவதும் வழக்கமாக இருந்தது. இந்த நிகழ்வுகள் எதுவும் தற்போது நடைபெறாமல் களையிழந்துள்ளது.
திரைப்படம், கைப்பேசி, டிவி பயன்பாடு அதிகரித்து வருவதாலும், தெருவுக்கு தெரு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதாலும் கிராம மக்கள் ஒன்றுகூடி ஓரிடத்தில் குழுமியிருந்து காணும் பொங்கலை கொண்டாடுவது அருகி வருகிறது.
இதனால் பரமத்தி வேலூா் காசி விஸ்வநாதா் காவிரி ஆற்றுக்கு உறவினா்கள், நண்பா்கள் ஒன்றுகூடி உணவுகளைப் பகிா்ந்து உண்டு மகிழும் நிகழ்வு நடைபெறவில்லை. இதனால் பரமத்தி வேலூா் காவிரிக் கரை சனிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.
