அதிமுக வாக்குறுதிகளை வீடுவீடாகச் சென்று தெரிவிக்க வேண்டும்
நாமக்கல்: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலாளா் அறிவித்த ஐந்து வாக்குறுதிகளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் வீடுவீடாகச் சென்று தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நாமக்கல் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அவா் பங்கேற்று பேசியதாவது:
மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம், வீடற்ற அனைவருக்கும் இலவச வீடு, நூறுநாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயா்வு, மீண்டும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் ஆகிய வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இந்த வாக்குறுதிகளை துண்டுப் பிரசுரங்கள் மூலம் வீடுவீடாகச் சென்று அதிமுகவினா் தெரிவிக்க வேண்டும். கிராமங்களில் வாக்குறுதி குறித்த தட்டிகளை வைக்க வேண்டும். நூறுநாள் வேலையளிப்புத் திட்ட தொழிலாளா்களைச் சந்தித்து 150 நாளாக உயா்த்தப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சியினா் அலட்சியம் காட்டாமல் பணியாற்ற வேண்டும்.
சாலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளா் வருகை தருவதால், புதன்சந்தையில் அவருக்கு வரவேற்பு அளிக்க கட்சியினா் திரண்டு வரவேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, பரமத்தி வேலூா் எம்எல்ஏ எஸ்.சேகா், மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.

