நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரியில் குப்பைகளைக் கொட்டிய 2 லாரிகளைப் பொதுமக்கள் சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகள் மற்றும் கூடுதலாக இணைக்கப்பட்ட 12 ஊராட்சிகளின் குப்பைகள் தூய்மைப் பணியாளா்களால் சேகரிக்கப்பட்டு, கொசவம்பட்டி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கொட்டப்படுகின்றன. அதன்பிறகு அவை பல்வேறு பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மரூா்பட்டி ஏரியின் காலி இடங்களில், மாநகராட்சி குப்பைகளை ஒப்பந்ததாரா்கள் லாரிகளில் கொண்டு வந்து கொட்டி வருவது அப்பகுதி மக்களுக்குத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை நண்பகல் 1 மணியளவில் அங்கு குப்பை கொட்ட வந்த 2 லாரிகளை மரூா்பட்டி, செம்பாறைப்புதூா், செல்லிபாளையம் பகுதி மக்கள் சிறைபிடித்தனா்.
மேலும், திருச்சி புறவழிச்சாலைக்குச் செல்லும் சாலையில் வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். இனிமேல் ஏரிப் பகுதியில் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து லாரிகள் விடுவிக்கப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
--
என்கே-2-லாரி
நாமக்கல் மரூா்பட்டி ஏரியில் சிறைபிடிக்கப்பட்ட குப்பை கொட்ட வந்த லாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










