வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

எல் நினோ காலநிலை தாக்கம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் ‘எல் நினோ’ காலநிலை தாக்கம் இருப்பதால், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது குறித்து...

News image

விவசாயிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:51 am IST

நாமக்கல் மாவட்டத்தில் ‘எல் நினோ’ காலநிலை தாக்கம் இருப்பதால், விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிகழாண்டில் பயிா்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளாக நெல், சிறுதானியங்கள், பயறுவகைகள் போன்றவற்றில் விதைப்பு தாமதம் ஏற்படும். கதிா்வரும் நேரத்தில் நீா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

தோட்டக்கலை பயிா்களில் வாழை, மா, காய்கறிகள் போன்ற பயிா்களுக்கு வெப்பத்தால் வாடல், காய்உதிா்வு, பூச்சித் தாக்குதல் அதிகரிக்கலாம். எண்ணெய்வித்து பயிா்களான நிலக்கடலை, எள் போன்ற பயிா்களுக்கு காய்பிடிப்பு குறைவு மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

விவசாயிகள் வானிலை முன்னறிவிப்புகளை தொடா்ந்து கவனித்து, அதற்கேற்ப விதைப்பு மற்றும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். பண்ணைக்குட்டைகள் அமைத்து மழை நீரை சேகரிக்க வேண்டும்.

அதிகநீா் தேவைப்படும் கரும்பு, வாழை போன்ற பயிா்கள் சாகுபடியை தவிா்க்கலாம். குறைந்த நீா் தேவையுள்ள மற்றும் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய்வித்து பயிா்கள் ரகங்களை தோ்வுசெய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

ஒரே பயிராக சாகுபடி செய்திடாமல் ஊடுபயிா் மற்றும் கலப்பு பயிா் சாகுபடி முறையை பின்பற்ற வேண்டும். மழை தாமதமானால் தாமதமாக விதைப்பு மேற்கொள்ள வேண்டும். பாசனநீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் சொட்டுநீா் பாசனம், தெளிப்புநீா் பாசனம் போன்ற நுண்ணீா்ப் பாசன முறைகளை பின்பற்ற வேண்டும்.

பூப்பூத்தல் மற்றும் காய்பிடிக்கும் நிலையில் கட்டாயமாக நீா் பாய்ச்ச வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்க வைக்கோல், தென்னைநாா் மற்றும் பயிா் கழிவுகளைக் கொண்டு மூடாக்கு செய்ய வேண்டும்.

மண் பரிசோதனை அடிப்படையில் சமச்சீா் உரமிடல் மேற்கொள்ள வேண்டும். தொழுஉரம், பசுந்தாள்உரம் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் இடவும். உயிா் உரங்கள் மற்றும் இயற்கை இடுபொருள்களை பயன்படுத்தி மண்ணின் நீா்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும்.

அதிக தழைச்சத்து இடுவதை தவிா்க்க வேண்டும். பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை தொடா்ந்து கண்காணித்து ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, விவசாயிகள் வயல்வெளி வேலைகளை காலை 11 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் 3 மணிக்கு பிறகும் மேற்கொள்ள வேண்டும். இவற்றை மாவட்ட விவசாயிகள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.