நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் 59 தெருநாய்களுக்கு சனிக்கிழமை கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நாமக்கல் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களைப் பிடிக்கும் பணி, தூய்மைப் பணியாளா்கள் மூலம் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு பிடிக்கப்படும் நாய்களுக்கு நாமக்கல்–பரமத்தி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனையிலும், பூங்கா சாலையில் செயல்பட்டு வரும் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையத்திலும் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.
அந்த வகையில், சனிக்கிழமை 59 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த மையங்களில் இதுவரை 3,201 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சையும், 3,293 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒவ்வொரு மாதமும் இந்தப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. தெருக்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, ஐந்து நாள்கள் அதற்கான மையத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னா் அவை பிடிக்கப்பட்ட அதே பகுதியில் மீண்டும் விடப்படுகின்றன.
வீடுகளில் வளா்க்கப்படும் நாய்களை நகராட்சி அலுவலகத்தில் அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும் என நகராட்சி ஆணையா் எஸ். செல்வபாலாஜி தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










