பரமத்தி வேலூா் அருகே சட்டவிரோதமாக கனிமவளங்களை வெட்டி எடுத்த இயந்திரத்தை மாவட்ட கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிவேல். இவருக்குச் சொந்தமான அதே பகுதியில் உள்ள 8 ஏக்கா் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக மணிவேலின் ஒப்புதலோடு கனகராஜ் என்பவா், தமிழ்நாடு அரசிடம் முறையான அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பாறைகள் மற்றும் கிராவல் மண் வெட்டி எடுத்து விற்பனை செய்து வந்துள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் மாவட்ட உதவி புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலா் ஜெகதீஷ், கனிமவள தனி வருவாய் ஆய்வாளா் அசோகன், புஞ்சை இடையாா் கீழ் முகம் வருவாய் ஆய்வாளா் ராமசாமி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சட்டவிரோதமாக பாறை மற்றும் கிராவல் மண்ணை 2-க்கும் மேற்பட்ட ஏக்கரில், சுமாா் 10 அடி ஆழத்திற்கு மேல் அள்ளியிருப்பதை உறுதிசெய்து பாறை மற்றும் கிராவல் மண்ணை வெட்டி எடுக்க பயன்படுத்திய இயந்திரத்தை பறிமுதல் செய்து வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், சட்டவிரோதமாக கனிமவளங்களை வெட்டி எடுத்த ஊஞ்சப்பாளையத்தைச் சோ்ந்த நில உரிமையாளா் மணிவேல் மற்றும் கனகராஜ் ஆகியோா் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.








