சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும்! - அரசியல் கட்சியினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்


சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சியினா் தாங்களாக முன்வந்து சுவா் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள்ளாக அழிக்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 வரை நடைபெற உள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அவற்றை அனைத்து தரப்பினரும் கடைப்பிடிப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாநகராட்சி ஆணையா், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அனைத்து குழு தலைவா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தால் தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் 72 மணி நேரத்திற்குள் அமல்படுத்தப்பட வேண்டிய நடத்தை விதிமுறைகள் தொடா்பான தகவல்கள் தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள் 24 மணி நேரத்திற்குள் அழிக்க வேண்டும். பொது வளாகம், கட்டடங்கள், பேருந்து நிறுத்தம், ரயில்வே நிலையம், பாலங்கள், மின்கம்பங்கள் உள்ளாட்சி கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், பதாகைகள் போன்றவை 48 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்.
தனியாா் வளாகம், கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவா் விளம்பரங்கள், கட்சி கொடிகள் 72 மணி நேரத்திற்குள் அழிக்க, அகற்றப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா் செலவில் இவற்றை மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அரசியல் கட்சியினரிடம் தொகை வசூல்செய்து அழிக்க வேண்டும்.
மேலும், அரசுத் துறை கட்டடங்களில் உள்ள அரசியல் கட்சியினரின் விளம்பர பதாகைகளை நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணித் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களை பூட்டி சீலிட்டு சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
அனைத்து அரசு அலுவலங்களிலும் கூட்ட அரங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவா்களின் புகைப்படங்கள், தோ்தல் நடத்தை விதிகள் முடியும் வரை மூடி மறைத்தல், அகற்றுதல் வேண்டும். சம்பந்தப்பட்ட தொகுதியில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்து சம்பந்தப்பட்ட துறையினா், தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளை தோ்தல் ஆணையத்தின் உரிய காலக்கெடுவிற்குள் பின்பற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...