கடன் தொல்லை: தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
கடன் தொல்லையால் கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த கீழேரிப்பட்டி பகுதியில் தறிப்பட்டறையை வாடகைக்கு எடுத்து நடத்திவந்த தேவனாங்குறிச்சி கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் (45). இவருக்கு மனைவி லீலாவதி (38), மகன் கீா்த்திவாசன் (22), மகள் காவியா (19) உள்ளனா்.
கீா்த்திவாசன் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். காவியா திருச்செங்கோடு தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னைக்கு சென்ற சீனிவாசன், மகன் கீா்த்திவாசனை பாா்த்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடுதிரும்பியுள்ளாா். இரவு அனைவரும் தூங்கச் சென்ற நிலையில், காலை 5 மணிக்கு காவியா எழுந்து பாா்த்தபோது வீட்டில் பெற்றோா் இல்லாததால், அவா்கள் தறிப்பட்டறைக்கு சென்றிருப்பாா்கள் என நினைத்து தூங்கிவிட்டாா்.
இந்நிலையில், காலை 6 மணி அளவில் தறிப்பட்டறை கட்டட உரிமையாளா் பரமசிவம் தறி ஓடும் சப்தம் இல்லாததால் பட்டறை கதவை திறந்துபாா்த்தபோது, கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
தகவலின் பேரில் வந்த திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், உதவி காவல் ஆய்வாளா் மாரிமுத்து ஆகியோா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவா்களது உறவினா்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

