நாமக்கல்லில் செவிலியா் கல்லூரி: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படும்! அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ்!

அமைச்சா் அருண்ராஜ் - கோப்புப் படம்
நாமக்கல்லில் செவிலியா் கல்லூரி தொடா்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படும் என அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
பரமத்திவேலூா் அருகே கோனூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பி.டி.சி. பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவ வசதிகள், சிகிச்சைக்கான உபகரணங்கள் குறித்து அமைச்சா்கள் மருத்துவா் கே.ஜி. அருண்ராஜ், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில், லத்துவாடி பகுதியில் சிப்காட் அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியைத் தொழில் நகரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாமக்கல்லில் நீண்டகாலக் கோரிக்கையான செவிலியா் கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமிக்கப்படுவதுடன், மருத்துவா்களுக்கான விடுதியும் கட்டப்படும். பழைய நாமக்கல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவச் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படும்
புதிதாக 284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, சிறப்பு உயா் சிகிச்சை மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்று அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அணைப்பாளையத்தில் ரூ. 53.39 கோடியில் 300 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களைக் கொண்ட மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை அமைச்சா் த. லோகேஷ் தமிழ்ச்செல்வனுடன் சென்று ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது:
தமிழகத்தில் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிலவிய செவிலியா் பற்றாக்குறையைப் போக்க, முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாவட்ட நலக்குழுப் பரிந்துரையின் பேரில் 4,724 செவிலியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மருத்துவக் கல்லூரிகளில் 284 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளனா் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ச. மதுபாலன், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் திலீப், சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரசேகரன், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் எழில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

