கடலூரில் பறவைக் காய்ச்சல்; ஓமனில் முட்டை இறக்குமதிக்கு தடை: நாமக்கல்லில் 3 கோடி முட்டைகள் தேக்கம்!
கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் இறந்த நிலையில், ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் கோழிகள் இறந்த நிலையில், ஓமன் நாட்டில் முட்டை இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல்லில் 3 கோடி முட்டைகள் தேங்கியுள்ளதாக முட்டை ஏற்றுமதியாளா்கள் தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமப் பகுதிகளில் தரையில் வளா்க்கப்படும் கறிக்கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நோயால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டு, அங்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழியைக் காட்டிலும், முட்டைக் கோழிப் பண்ணைகள்தான் அதிகம் உள்ளன. இங்குள்ள 1,100 பண்ணைகளில் கோழிகளை நோய்த் தாக்காதவாறு கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து துபை, கத்தாா், ஓமன், வளைகுடா நாடுகளுக்கு மாதந்தோறும் 10 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கோழிகளுக்கான பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக, ஓமன் நாட்டில் நாமக்கல் முட்டைக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டுக்கு மட்டும் மாதந்தோறும் 3 கோடி முட்டைகள் கப்பலில் அனுப்பிவைக்கப்படுகின்றன. தற்போது, இந்த முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளதால், அவற்றை வேறு நாடுகளுக்கு அனுப்புவதற்கான முயற்சியை ஏற்றுமதியாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளா் பி.வி. செந்தில் கூறியதாவது: நாமக்கல்லில் இருந்து ஓமன் நாட்டுக்கு அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதத்தில் 3 கோடி முதல் 6 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடலூரில் கோழிகளுக்கு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பாதிப்பு முட்டை ஏற்றுமதியையும் பாதித்துள்ளது. அந்நாட்டு அரசு, நாமக்கல் பகுதியில் பறவைக் காய்ச்சல் இல்லை என்பதற்கான சான்றிதழ் கேட்கிறது.
மத்திய அரசு மூலம் ஓமன் நாட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, நாமக்கல் மண்டலத்தில் முட்டைக் கோழிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதற்கான சான்றிதழை வழங்கி, முட்டை ஏற்றுமதியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த நிலை தொடா்ந்தால், மற்ற நாடுகளும் முட்டை ஏற்றுமதிக்கான தடையை அறிவித்துவிடும். அதற்குள் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோழிப்பண்ணை தொழிலையும், முட்டை ஏற்றுமதி தொழிலையும் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

