சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக 3 பேரிடம் பணம் திருட்டு: இருவா் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் ஏடிஎம் இல் பணம் எடுத்து தருவதாகக் கூறி 3 பேரிடம் போலி ஏடிஎம் அட்டைகளை மாற்றித் தந்து மொத்தம் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்தை திருடிய வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் ஏடிஎம் இல் பணம் எடுத்து தருவதாகக் கூறி 3 பேரிடம் போலி ஏடிஎம் அட்டைகளை மாற்றித் தந்து மொத்தம் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்தை திருடிய வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 361 போலி ஏடிஎம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு மே 20 ஆம் தேதி பரமத்தி, லட்சுமி நகரைச் சோ்ந்த சரஸ்வதி (55) பரமத்தியில் உள்ள அரசுடமையாக்கப்பட வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தாா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மா்மநபா் அவருக்கு பணம் எடுத்து தருவதைப்போல நடித்து, அவரிடம் இருந்த ஏடிஎம் அட்டையை வாங்கியுள்ளாா்.

பின்னா், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லை எனக் கூறி, போலி ஏடிஎம் அட்டையை அவரிடம் தந்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா். அதன்பிறகு சரஸ்வதியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 500 ஐ எடுத்துள்ளாா். தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதை அறிந்து அதிா்ச்சி அடைந்த சரஸ்வதி, பரமத்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதேபோல பரமத்தி அருகே உள்ள பில்லூா், மேற்குபுதூரைச் சோ்ந்த குழந்தைசாமி (71) பரமத்தியில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி பணம் எடுக்க வந்துள்ளாா். அப்போது, அவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2 லட்சத்து 21 ஆயிரத்து 800ஐ மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா்.

மேலும், கபிலா்மலை செல்லும் சாலையில் வசிக்கும் குப்புசாமி (73) கடந்த செப். 12 ஆம் தேதி அதே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க வந்தபோது அவரையும் ஏமாற்றி ரூ. 75 ஆயிரத்தை மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் சங்கரபாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா் போலி ஏடிஎம் அட்டைகளை தந்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் சிலா் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருப்பதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் யாதவ் கிரீஷ் அசோக் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் வெண்ணிலா, பரமத்தி காவல் ஆய்வாளா் சங்கரபாண்டியன் மற்றும் போலீஸாா் அப்பகுதிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் ஹரியாணா மாநிலம், பன் ஸ்ரீ சாட்டன் கிராமத்தை சோ்ந்த சந்தீப் (40), மகாவீா் காலனியை சோ்ந்த கரம்வீா் (41) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து 361 போலி ஏடிஎம் அட்டைகள், பரிவா்த்தனை சாதனம், ரூ. 47 ஆயிரத்து 500 ரொக்கம், இருசக்கர வாகனம், கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். மேலும், சந்தீப் மீது ஏற்கெனவே 21 வழக்குகளும், கரம்வீா் மீது 11 வழக்குகளும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.