புதிய கொள்கை கைகொடுக்குமா? சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்க வாய்ப்பு

மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின், புதிய விமானப் போக்குவரத்து கொள்கையில் உள்ள பல்வேறு சலுகைகளால், சேலம் விமான நிலையத்தில்
Updated on
3 min read

மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின், புதிய விமானப் போக்குவரத்து கொள்கையில் உள்ள பல்வேறு சலுகைகளால், சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமானச் சேவை தொடங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், தொழிலதிபர்களிடையே ஏற்பட்டுள்ளது.
 சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் கடந்த 1993-இல் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசின் விமான நிலைய ஆணையக் குழுமம் மூலம் விமான நிலையம் அமைக்கப்பட்டது.
 இதில், என்.இ.பி.சி. ஏர்லைன்ஸ் மூலம் விமானச் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், போதிய வருவாய் இல்லாததால், விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
 ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மூலம் சேலம்-சென்னை மார்க்கத்தில் 2009 முதல் 2011 வரை விமானச் சேவை இயக்கப்பட்டது. போதிய பயணிகள் இல்லாதது, வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2011- இல் மீண்டும் விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் 2011 முதல் தற்போது வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
 சேலத்தில் உள்ள தொழிலதிபர்களுக்குச் சொந்தமான மூன்று விமானங்கள், ஜே.எஸ்.டபிள்யு. நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
 சேலம் விமான நிலையத்தில் 6000 அடி நீளம் ஓடுதளம் உள்ளது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுதளத்தை விரிவுப்படுத்தவும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக மேலும் சுமார் 570 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
 விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக வருவாய்த் துறை ஏற்கெனவே நில அளவீடு பணிகளைச் செய்து முடித்துள்ளது. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நில எடுப்புக்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 அதேநேரத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் பெங்களூரு, கோவை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்குச் சென்று, அங்கிருந்து மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
 சேலத்தில் இருந்து சாலை மார்க்கமாக இந்த இடங்களை சுமார் மூன்று மணி முதல் 4 மணி நேரத்தில் விரைவுச் சாலைகளில் சென்றடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 இதனால், பெரும்பாலானோர் மேற்கண்ட இடங்களுக்கு கார்களில் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்று விடுகின்றனர். விமான இயக்கத்தைப் பொருத்தவரையில் சேலத்துக்கு போதிய சாதகமான அம்சங்கள் இருந்தாலும், மறுபக்கம் குறுகிய தூரத்தில் அமைந்துள்ள விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாதகமாக உள்ளன.
புதிய கொள்கை கை கொடுக்குமா?
 இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணந்த தேசிய விமான போக்குவரத்துக் கொள்கைக்கு கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 மத்திய அரசின் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி, 1 மணி நேரத்துக்குள் பயண இலக்கை அடையும் குறைந்த தொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே விமான நிலையங்கள் வசூலிக்க முடியும்.
 விமானப் போக்குவரத்து அல்லாத வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாதகமான அம்சங்கள் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது.
 எனவே, மத்திய அரசின் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையால், சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை இயக்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
தமிழக முதல்வருக்கு கோரிக்கை
 சேலத்தில் விமான நிலையம் மீண்டும் இயங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில் அமைப்புகள், வர்த்தகர்களிடையே எழுந்துள்ளது.
 இதுதொடர்பாக, இந்தியத் தொழில் வர்த்தக மகாசபையின் சேலம் பிரிவு தலைவர் பொறியாளர் கே.மாரியப்பன் கூறியது:
 புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையில் மண்டல அளவில் செயல்படாத சிறிய விமான நிலையங்களை மீண்டும் சேவை புரிய மண்டல இணைப்புச் சேவைத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் தனியார் விமான நிறுவனங்களுக்கு ஒரு மணி நேர பயணத்துக்கு ரூ.2,500 மட்டும் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும்.
 இந்தச் சேவையில் போதுமான எண்ணிக்கையில் பயனாளிகள் பயணம் செய்யாவிட்டால் அதனால் ஏற்படும் இழப்புத் தொகையை விமானப் போக்குவரத்துத் துறையும், மாநில அரசும் 80:20 என்ற விகிதாசாரத்தில் விமான நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும்.
 விமான நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள், விமான டிக்கெட்டுக்கான 14 சதவீத சேவை வரி, கலால் வரி போன்றவற்றை வசூலிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 மாநில அரசின் வணிக வரித் துறை வரிகளை விமானத்துக்குப் பயன்படுத்தும் எரிபொருளுக்கு 10 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகளால் விமானக் கட்டணம் மிகப்பெரிய அளவில் குறைக்கப்படும்.
 தற்போது பெங்களூரு, கோவை போன்ற விமான நிலையங்களில் விமானங்களை பழுது பார்க்கவும், பராமரிக்கவும், முழுப் பரிசோதனை செய்வதற்கும் பணிமனைகள் செயல்படுகின்றன.
 அங்கு சேவைக் கட்டணங்கள் அதிகமாக வசூலிக்கப்படுவதால், சேலம் விமான நிலையத்தில் இந்த சேவைகளுக்காக பணிமனைகளை அமைத்தால் குறைந்த கட்டணங்களில் விமானங்களை இயக்கும் பல்வேறு நிறுவனங்கள் பலவிதத்திலும் பயனடைய வாய்ப்புள்ளது.
 இரவு நேரங்களில் விமானங்கள் வந்திறங்கவும், புறப்படவும் தேவையான மின் ஒளி வசதிகளை செய்து கொடுத்தால், இரவு நேரத்திலும் சேலம் விமான நிலையத்தைச் செயல்படுத்தலாம்.
 மேலும் 2004 முதல் 2009 வரை செயல்பட்டு வந்த உள்நாட்டு கன்டெய்னர் முனையம் தற்போது மூடப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் சேலத்தில் இருந்து சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ளன. எனவே, விமானம் மூலம் சரக்கு சேவைகளைச் செய்தால் தினந்தோறும் பூக்கள், ஜவுளி மாதிரிகள், கூரியர் சேவைகளை அதிகளவில் செய்யலாம்.
 சேலம் விமான நிலையத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து மண்டல அளவில் செயல்படாத விமான நிலையங்களை அருகில் உள்ள விமான நிலையங்களுடன் ஒருங்கிணைத்து மீண்டும் இயக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சலுகைகளை வழங்கினால், சேலம் விமான நிலையம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com