தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து மற்றும் ரயில்களில் எடுத்துச் செல்லப்படுவதால், அதைக் கண்டறிய முடியாமல் உணவுப் பாதுகாப்புத் துறையினர் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும், குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருள்கள் தடையில்லாமல் கிடைத்து வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா மற்றும் நிகோடின் கலந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் தயாரிப்பது, விநியோகம் செய்வது மற்றும் விற்பனை செய்வதைத் தடுக்க அந்தந்த மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்பு சரக்கு வாகனங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள், தற்போது சாதாரணப் பேருந்துகள், ரயில்களில் கடத்தி வரப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கர்நாடகம், தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன.
சரக்கு வாகனங்களில் கடத்தி வரப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டுவந்த குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் தற்போது தடையைத் தொடர்ந்து, மாற்று வாகனங்களில் அதாவது பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் மறைமுகமாக எடுத்து வரப்படுகின்றன.
இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியது:
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுங்க சாவடி உள்ளிட்டவற்றில் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுவதில்லை. இதனால் எளிதாக சரக்கு வாகனங்களில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் தொடர் சோதனையால் ஆங்காங்கே சரக்கு வாகனங்களில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதனால் பான் மசாலா, குட்கா பொருள்களைக் கடத்தி வருவோர், தற்போது சோதனையின் காரணமாக மாற்று முறைகளில் அதாவது ஆம்னி சொகுசுப் பேருந்து, வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில் உள்ளிட்டவற்றில் எடுத்துச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.
இதுபோன்ற முறையில் பான் மசாலா பொருள்கள் எடுத்து வருவதைக் கண்டறிந்து பிடிப்பதில் சிரமம் உள்ளது. இது உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது. அந்தவகையில், வேலூர், கோவை மாவட்டங்களில் பேருந்துகளில்தான் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் 2017 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் 2,547 கிலோ குட்கா, பான் மசாலா உள்ளிட்ட நிகோடின் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா பொருள்களின் மதிப்பு ரூ.37 லட்சமாகும். இதுதொடர்பாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பான் மசாலாவுடன் நிகோடின் சேர்த்து, தனித் தனி இரண்டு பாக்கெட்டுகளை விற்பது குற்றமாகும்.
சேலத்தில் சிறிய மற்றும் பெரிய கடைகளில் இதுபோன்று பான் மசாலாவுடன் நிகோடின் சேர்த்து தனித்தனி இரண்டு பாக்கெட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்று தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருள்களை விற்கும் வணிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடையும் மூடப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.