வறட்சியால் வெற்றிலை சாகுபடியை கைவிடும் விவசாயிகள்

சேலம் கிழக்கு மாவட்டத்தில் தொடர்ந்துவரும் வறட்சியால்,  வெற்றிலை பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டு வருகின்றனர்.
Updated on
2 min read

சேலம் கிழக்கு மாவட்டத்தில் தொடர்ந்துவரும் வறட்சியால்,  வெற்றிலை பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டு வருகின்றனர்.
சேலம் கிழக்கு மாவட்டத்தில் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை,  ஆணைமடுவு அணை,   பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசன வசதி பெறும் கிராமங்கள் மற்றும் பேளூர்,  ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன் பாளையம்,  நரசிங்கபுரம் ஆத்தூர்,  தலைவாசல்,  தம்மம்பட்டி,  கெங்கவல்லி பகுதியில் வசிஷ்டநதி,  வெள்ளாறு,  ஸ்வேதாநதி கரையோரங்களில் நீர்ப் பாசன வசதி கொண்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீண்டகால பலன் தரும் வெற்றிலையை நன்செய் விவசாயிகள் விரும்பிப் பயிரிடுகின்றனர்.
விவசாயிகளுக்கும்,  கூலித் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பும்,  கூடுதல் வருவாயும் கிடைத்ததால்,  அகத்தி,  கல்யாண முருங்கை மர நிழலில் கொடிக்கால் அமைத்தும்,  இளம் பாக்கு மர தோப்புகளில் ஊடுபயிராகவும் சேலம் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 5,000 ஏக்கர் பரப்பளவில்,  வெள்ளை மற்றும் கருப்பு ரக வெற்றிலையை பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். 
இப் பகுதியில் விளைவிக்கப்படும் வெற்றிலையை,  வாழப்பாடியை அடுத்த பேளூர்,  பெரிய கிருஷ்ணாபுரம்,  ஆத்தூரில்  இயங்கும் தினசரி வெற்றிலை மண்டிக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகளிடமிருந்து ஏல முறையில் வெற்றிலையைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள்,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி,  கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு பகுதிக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். 
இந் நிலையில்,  சேலம் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக படிப்படியாக மழைப் பொழிவு குறைந்து வருவதோடு,  பருவ மழையும் பொய்த்து வறட்சி நிலவி வருகிறது. அதனால்,  நீர்ப் பாசனத்துக்கு வழியின்றி ஏறக்குறைய 2,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலைக் கொடிக்கால் தோட்டங்கள் காய்ந்து கருகி அழிந்துபோயின.  அதே நேரத்தில், வெற்றிலைக்குப் போதிய விலையும் கிடைப்பதில்லை.  அதனால், புதிதாக வெற்றிலை கொடிக்கால் அமைத்து சாகுபடி செய்வதை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டு வருகின்றனர். 
 தினசரி மண்டிக்கு வெற்றிலை விற்பனைக்கு வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது.  110 முதல் 120 வெற்றிலைகளைக் கொண்ட கட்டு "ஒரு கவுளி' எனவும், 57 முதல் 60 கவுளிகள் ( சராசரியாக 7,000 வெற்றிலைகள்)  கொண்ட ஒரு பெரிய கட்டு "ஒரு ஒத்து' எனவும் குறிப்பிடப்படுகிறது.  நாளொன்றுக்கு 1,000 ஒத்து வெற்றிலை கட்டுகள் விற்பனைக்கு வந்த நிலை மாறி,  தற்போது சேலம் கிழக்கு மாவட்டம் முழுவதும் 500 ஒத்து விற்பனைக்கு வருவதே இழுபறியாக உள்ளது.
அதனால்,  உள்ளூர் தேவைக்கே வெற்றிலை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  எனவே, சேலம் கிழக்கு மாவட்ட வெற்றிலை வியாபாரிகள்,  நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், கரூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து வெற்றிலையை கொள்முதல் செய்து வந்து,  தரம் பிரித்து வர்த்தகம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து,   பெரியகிருஷ்ணாபுரம் வெற்றிலை வியாபாரிகள் கூறியது:  சேலம் கிழக்கு மாவட்டத்தில் தொடர்ந்து வரும் வறட்சியால்,  பாசனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  அதனால் கொடிக்கால் அமைத்து வெற்றிலை சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.  உற்பத்தியின்றி விற்பனைக்கு வரத்து குறைந்து போனதால்,  உள்ளூர் தேவைக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது  என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com