நிதி நிலை அறிக்கையில் பொது சுகாதார திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
Updated on
1 min read

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் கோகுலம் மருத்துவமனை தலைவர் கே.அர்த்தநாரியின் மருத்துவ சேவையைப் பாராட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் குறிப்பாக குக் கிராமங்கள், மலைப் பிரதேசங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும்,  மக்கள் எளிதில் விரைவாகச் சென்றடையக் கூடிய வகையில் அரசு மருத்துவமனைகள்,  ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடர்ந்து திறந்து வருகிறோம்.
அந்தந்தப் பகுதியில் தரமான தகுதியான சிறந்த மருத்துவர்களைக் கொண்ட,  குறைந்த கட்டணத்தில் ஏழைகளும் பயன்பெறக் கூடிய தனியார் மருத்துவமனைகளும்,  அரசு மருத்துவமனைகளோடு ஒருங்கிணைந்து மனித நேயத்தோடு மக்கள் நோய் தீர்க்க முன்வர வேண்டும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 213 அரசு மருத்துவமனைகளும் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவத் தொழில்நுட்பத்துடன் கூடிய நுணுக்கமான சிகிச்சைகளை முதன்முதலில் 1990  கால கட்டங்களிலேயே சேலத்துக்கு கொண்டு வந்த பெருமை கோகுலம் மருத்துவமனையைச் சாரும்.
கடந்த 6 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய சிகிச்சை,  ஆஞ்சியோகிராம்,  ஆஞ்சியோபிளாஸ்டி  ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.  இதய அறுவை சிகிச்சையில் 99 விழுக்காடு சிகிச்சை பெற்று மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்றார்.
விழாவில்,  கோகுலம் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் கே.அர்த்தநாரி,  பாராட்டு விழா குழுத் தலைவர் ஆர்.பி.சாரதி,  சோனா கல்வி குழுமத் தலைவர் சி.வள்ளியப்பா,  திரிவேணி குழுமத் தலைவர் பி.பாலசுப்பிரமணியன்,  கே.பி.என். டிராவல்ஸ் கே.பி.நடராஜன்,  மகேந்திரா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.பாரத்குமார்,  ராஜேந்திர பிரசாத், கே.ஓய்.பாஷா மற்றும் எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏ.க்கள்,  கோகுலம் மருத்துவமனை இயக்குநர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com