வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.5) நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
மின்னணு வாக்குப்பதிவைக் கைவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில், பா.ம.க.வும் வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவளிக்கிறது.
கடந்த 2009-ஆம் ஆண்டில் பா.ஜ.க.வும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறிய நிலையில், தற்போதும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சீட்டு முறையைத் தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். இதேபோன்று, வாக்குக்குப் பணம் கொடுக்கும் முறையையும் முழுமையாகத் தடுக்க வேண்டும்.
பா.ஜ.க.வுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அரசியலில் அவ்வப்போது எதிர் கருத்துக்கள் வருவது சகஜம்தான். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு, தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் நடைபெறும் மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
தற்போது தமிழகத்தில் ஊழல் மட்டுமே வளர்ந்து வருகிறது. மோட்டார் வாகனத் தொழிலில் ஊழல் காரணமாக, ரூ.25 ஆயிரம் கோடி தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டது.
ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்டதால், 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. 5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். தமிழகம் தொழில்துறையில் 15-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அறிமுகப்படுத்தப்பட்ட விஷன்- 2023 திட்டத்துக்காக இதுவரை ரூ.9 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ.9 ஆயிரம் கோடி கூட முதலீடு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,558 கோடி நிதி கிடைக்காமல் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து சி.பி.ஐ. தலைமையில் பல்துறை வல்லுநர் குழு விசாரிக்க வேண்டும். ஓராண்டுக்கு 2 லட்சம் விடைத்தாள்கள் அச்சிட்டால் போதும் என்ற நிலையில், 20 லட்சம் விடைத்தாள்கள் அச்சிடப்பட்டதால், ரூ.60 கோடி ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் நிகழ்ந்துள்ள ஊழல்கள் குறித்து, ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் விரிவான அறிக்கையை விரைவில் அளிப்பார்.
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலையை கைவிடும்வரை, பாமக தொடர்ந்து சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட்டம் நடத்தும்.
மேட்டூர் அணையை முழுமையாகத் தூர்வார வேண்டும். தற்போது, 60 முதல் 65 டி.எம்.சி. வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. மீதி சேறும் சகதியுமாக உள்ளது. இந்தநிலையில், 15 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலில் கலந்துவிட்டது. தண்ணீரை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதால், அதனை முறையாகப் பாதுகாக்க வேண்டும். நீர் மேலாண்மைத் திட்டங்கள் குறித்து முதல்வருடன் விவாதம் நடத்த அன்புமணி ராமதாஸ் தயாராக உள்ளார்.
சிலை கடத்தல் விவகாரத்தில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சரியாக விசாரணை நடத்தியுள்ளார். சி.பி.ஐ. விசாரணை நடந்தால், மேலும் காலதாமதம் ஏற்படும். இந்தத் தாமதத்தை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதால்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
பேட்டியின்போது, பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள், சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

