அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவரும், பள்ளியின் புரவலருமான கரட்டூர் மணி கொடியேற்றி, சுதந்திர தின விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி வளாகத்தில் 72 மரக்கன்றுகள் நடப்பட்டன.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் புலவர் பழனிசாமி தலைமையேற்றார். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் டி.கதிரேசன் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் துணைத் தலைவர் ராமன் கொடியேற்றி மாணவியருக்கு பரிசுப் பொருள்களை வழங்கினார். முனியம்பட்டி அரசு மாதிரிப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எடப்பாடி நகர காங்கிரஸ் சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் நகரப் பொறுப்பாளர் நாகராஜ் தலைமையிலான நிர்வாகிகள், கொடியேற்றி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து ஏழை, எளிய மாணவர்களுக்க கல்வி உபகரணங்களை வழங்கினர். எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் முருகன் தலைமையில் விழா நடைபெற்றது.
வாழப்பாடியில்...
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை சத்தியக்குமாரி வரவேற்றார். பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் பார்த்திபன் தேசிய கொடியேற்றினார். அண்ணாநகர் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை ஷபீராபானு தலைமை வகித்தார். வாழப்பாடி கிளை நூலகத்தில் வாசகர் வட்டத் தலைவர் வரதராசன் தலைமை வகித்து கொடியேற்றினார்.
பேளூர் உருது தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியர் க.செல்வம் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் பாபுஜி இப்ராஹிம் கொடியேற்றினார். பேளூர் அங்காளம்மன் கோயில் பகுதியில் இந்து மற்றும் முஸ்லிம் மதத்தினர் ஒன்றிணைந்து கொண்டாடினர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் காந்திபுரம் நடுநிலைப் பள்ளியில் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உடையார்பாளையத்தில் உள்ள காந்தி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
ஏ.ஈ.டி. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.சங்கர் கொடியேற்றினார். தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை இரா.தனலட்சுமியும், பெரியேரி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் க.கைலாசமும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.டி.அர்ச்சுனனும் கொடியேற்றினர்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 8-ஆவது வார்டு தொடக்கப் பள்ளியில் அதிமுக செயலரும், முன்னாள் பேரூராட்சித் தலைவருமான பொ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி வார்டு உறுப்பினர் உஷா கொடியேற்றினார். செந்தாரப்பட்டி அரசு மகளிர் பள்ளியில் பிடிஏ தலைவர் துரை.ரமேஷ் தலைமை வகித்தார். மகளிர் பால் சொசைட்டி தலைவர் ராஜேந்திரன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
கடம்பூரில் பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வம் தலைமையில் விழிப்புணர்வு பேரணியை ரெங்கநாதன் தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவர்கள் தேசத் தலைவர்களின் வேடமணிந்தும், தேசத் தலைவர்களின் படங்களை கைகளில் ஏந்தியவாறும் சென்றனர்.
ஆட்டையாம்பட்டியில்...
மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஒவியப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்ற பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் ர. கண்ணனுக்கு பாராட்டு
தெரிவிக்கப்பட்டது.
இளம்பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிடிஏ தலைவர் வருதராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக அலமேலு டெக்ஸ் ராஜேந்திரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.
இளம்பிள்ளை ஜோதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சேலம் ரீச் அகாதெமி இயக்குனர் எம்.பிரின்ஸ் பராகுவலீத் ராஜா, செயலர் பி.தமிழரசன், பெத்தாம்பட்டி தொழிலதிபர் பி.ஜெயவேல் கலந்துகொண்டனர்.