
சேலம் மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் 3 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார். இதில், ரூ.33 கோடி மதிப்பிலான 51 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை (ஆக.29) இரவு சேலம் வந்தார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 30) காலை 7.30 மணிக்கு தனது சொந்த தொகுதியான எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோனேரிப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் மகுடஞ்சாவடி விரிவுபடுத்தப்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்கிறார்.
இதில் 2 முடிவுற்ற திட்டப் பணிகளை சுமார் ரூ.2.48 கோடி மதிப்பில் திறந்து வைத்தும், 48 புதிய பணிகளுக்கு ரூ.30.83 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டியும், 229 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார்.
மேலும், எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை பயணியர் மாளிகையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் இயக்குநர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை 9.30 மணிக்கு மாநகராட்சியின் சார்பில் 12 புதிய பூங்காக்களை முதல்வர் திறந்து வைக்கிறார். பின்னர் சீர்மிகு திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கு 55 இரண்டு அடுக்கு மூன்று சக்கர மின்கல மோட்டார் வாகனங்களைப் பயன்பாட்டுக்கு வழங்குகிறார்.
தொடர்ந்து நேரு கலையரங்கத்தில் காலை 9.45 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் மாசில்லா சேலம் மாவட்டம் என்ற விழிப்புணர்வு முகாமை தொடக்கிவைக்கிறார். மாநகரக் காவல்துறை சார்பில் பள்ளிகளில் உள்ள சாலை பாதுகாப்பு ரோந்து குழுக்கள் விரிவுப்படுத்தப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சுமார் 2,369 பயனாளிகளுக்கு ரூ.4.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு அஸ்தம்பட்டி பொதுப் பணித்துறை ஆய்வு மாளிகையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கத் தலைவர்கள், இயக்குநர்களைச் சந்திக்கிறார்.
இதையடுத்து, சனிக்கிழமை (செப்டம்பர் 1) காலை 10 மணிக்கு அயோத்தியாப்பட்டணம் ஊராட்சியில் அனுப்பூர் ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தினை முதல்வர் திறந்து வைக்கிறார்.
காலை 11 மணிக்கு கருமந்துறை - சின்ன கல்வராயன் மலை ஊராட்சித் திடலில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 110 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள் வழங்குதல், சிறப்புத் திட்டங்கள் தொடக்க விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் 3 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.15.25 கோடி மதிப்பில் 18 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.33.82 கோடி மதிப்பில் 51 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.1.25 கோடி மதிப்பிலான பணிகளை தொடக்கி வைத்தும், 5,249 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கிறார்.
இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 2) காலை 10.40 மணிக்கு ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வரின் வருகையையொட்டி சேலம் நகரம் மற்றும் புறநகர பகுதியில் சுமார் 1500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




