ஆணைமடுவு அணையில் முதன்முறையாக மிதவைக் கூண்டு முறையில் 10,000 மீன்கள் வளர்ப்பு திட்டம்
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் முதன்முறையாக மிதவைக் கூண்டு முறையில்


சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் முதன்முறையாக மிதவைக் கூண்டு முறையில் 10 ஆயிரம் மீன்கள் வளர்க்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆணைமடுவு மீன் விதைப் பண்ணையில் நிகழாண்டில் 3 லட்சத்து 20ஆயிரம் மீன் குஞ்சுகள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டுள்ளன.
புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது.
கல்வராயன் மலையில் அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில், கரியகோயில் அணை அமைந்துள்ளது. இரு அணைகளிலும் மீன் வளர்ச்சித் துறை வாயிலாக மீன்கள் உற்பத்தி செய்து, மீனவர் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து, அணை வளாகத்திலேயே பொதுமக்களுக்கு மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இரு அணைகளுக்கு மட்டுமின்றி, வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளிலும், தனியார் பண்ணை குட்டைகளிலும் மீன் வளர்ப்பு தொழிலை மேம்படுத்த மீன்வளர்ச்சித் துறை முடிவு செய்தது.
அதனையடுத்து, மேட்டூர் அணையில் செயல்படுவதைப்போல, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையிலும், 2008-2009 திட்டத்தின் கீழ் , ரூ.14 லட்சம் செலவில் சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய மீன் விதைப் பண்ணையை, மீன் வளர்ச்சித்துறை அமைத்தது. 2010ம் ஆண்டில் இருந்து அந்த மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது.
புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில், மீன் விதைப் பண்ணை அமைக்கப்பட்டதால், சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மீன் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட விவசாயிககளுக்கு, மீன் வளர்ப்பு குறித்து முறையான பயிற்சி பெறுவதும், பண்ணை வளர்ப்பு மற்றும் விற்பனைக்கு ஏற்ப தரமான மீன் குஞ்சுகளை கொள்முதல் செய்வதும் எளிமையானது.
நிகழாண்டில், மேட்டூர் அணை மீன் விதைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட இந்திய சிறு ரக கெண்டை விரலிகள், இதர கெண்டை விரலிகள் உட்பட இதுவரை 3,20,000 மீன் குஞ்சுகள், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை மீன் விதைப்பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளன.
அவற்றில் 2 லட்சத்து 20ஆயிரம் மீன் குஞ்சு விரலிகள் விற்பனையாகி விட்டன.
எஞ்சியுள்ள 1 லட்சம் இதர வகை கெண்டை விரலிகளையும், 1,000 கெண்டை விரலிகளுக்கு ரூ. 162 விலை நிர்ணயித்து, மீன் வளர்க்க விரும்பும் விவசாயிகள், மீனவர் சங்கங்களுக்கு இம்மாத இறுதிக்குள் விற்பனை செய்திட மீன் வளர்ச்சித்துறை முடிவு செய்துள்ளது.
மேட்டூர் அணையில், அணை நீருக்குள் வலை கட்டிய மிதவை கூண்டுகளை வைத்து, மிதவை கூண்டுக்குள் மீன் வளர்க்கும் திட்டம் சோதனை முறையில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது. மேட்டூர் அணையின் ஆழமும் அழுத்தமும் மட்டுமின்றி, அலைகளும் அதிகமாக இருப்பதால், மிதவை கூண்டு முறை மீன் வளர்ப்பு முறையில் இலக்கை எட்ட முடியவில்லை.
அதனால், நிகழாண்டில் அத்திட்டத்தை புழுதிக்குட்டை ஆணைமடுவு அணைக்கு மீன் வளர்ச்சித்துறை மாற்றியது. அதனையடுத்து, ஆணைமடுவு அணையில் முதன்முறையாக, அணை நீருக்குள் பத்து மிதவை கூண்டுகள் வைத்து, ஒரு கூண்டிற்குள் தலா 1,000 மீன் குஞ்சுகள் வீதம், மொத்தம் 10,000 மீன் குஞ்சுகள் , மிதவை கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சோதனை முறையில் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அது குறித்து மீன் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
"ஆணைமடுவு அணை மீன் விதைப்பண்ணையில்,. தற்போது 1 லட்சம் சாதாரண கெண்டை விரலி மீன்குஞ்சுகள் விற்பனைக்குள்ளன. மீன் வளர்க்க விரும்பும் விவசாயிகள் அவற்றை வாங்கி வளர்த்து பயனடையலாம். ஆணைமடுவு அணையில் முதன்முறையாக மிதவை கூண்டு முறையில் மீன் வளர்க்கும் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக பிரத்யேக பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு, மிதவை கூண்டுக்குள் வளரும் மீன் குஞ்சுகளுக்குத் தேவையான தீவனம் கொடுத்து முறையாகப் பராமரிக்கப்படுகிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால், ஆணைமடுவு அணையில்,நிரந்தரமாக மிதவை கூண்டு முறையில் மீன்கள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தும் வாய்ப்புள்ளது'. என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...