மேட்டூர் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட காவிரிக் கரையோர ஐந்து கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் சங்ககிரி வட்டங்களுக்குள்பட்ட காவிரிக் கரையோர பகுதிகளான புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி, கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி அக்ரஹாரம் அகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிப்பது, துணி துவைப்பது, நீச்சல் அடிப்பது, கரையில் இருந்து வேடிக்கை பார்ப்பது, புகைப்படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது உடைமைகள், கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும், இதுகுறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், காவிரிக் கரையோர கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அந்தந்தக் கிராமங்களில் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். காவிரிக் கரையோர கிராமப் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீதர், ஜானகி, அருள்முருகன், கருப்பண்ணன், அழகேசன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடத்தில் ஆட்டோ மற்றும் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்து வருகின்றனர். சங்ககிரி வட்டாட்சியர் கே.அருள்குமார் இப்பகுதிகளில் மேற்கொண்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார். இப்பகுதிகளில் வருவாய்த்துறையினர் இரவு முழுவதும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி பகுதியில்...
எடப்பாடி பகுதி காவிரிக் கரையோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம்
வருவாய்த் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, நெடுங்குளம், கூடக்கல், குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், ஆற்றின் பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை எடப்பாடி வட்டாட்சியர் கேசவன் , துணைவட்டாட்சியர் மாணிக்கம் மற்றும்
வருவாய் அலுவலர்கள் கரையோர மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி எச்சரிக்கை விடுத்தனர். காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்புக் குழுவினர், பூலாம்பட்டி பரிசல்துறை, படித்துறை, விசைப்படகு முனையம் உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







