சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் தாண்டி நிலம் அளவீடு செய்யும் பணி சேலம் மாவட்டத்தில் நிறைவு பெற்றது.
சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலைத் திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடியில் சுமார் 277 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்தச் சாலை சென்னை வரை செல்கிறது. இதனிடையே, சேலம் மாவட்டத்தில் முதற்கட்ட பணியாக நிலம் அளவீடு செய்யும் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி தொடங்கியது.
அதாவது சேலம் மாவட்டத்தில் ஆச்சாங்குட்டப்பட்டி தொடங்கி சுமார் 36.3 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பசுமைவழி சாலை திட்டம் அமைகிறது. இதில் 20 கிராமங்களுக்கு உள்பட்ட தனியார் நிலங்கள் 186 ஹெக்டேரும், அரசு புறம்போக்கு நிலங்கள் 46 ஹெக்டேரும், வனப்பகுதியில் 16 ஹெக்டேரும் என 248 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் குறைந்தபட்ச இழப்பீடாக ரூ. 21.52 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 9.04 கோடி வரை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சேலம் -தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதியான மஞ்சவாடி பகுதியில் துவங்கி அரியானூர் பகுதி வரை சுமார் 36.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அளவீடு பணிகள் திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
மஞ்சவாடியில் நில அளவீடு செய்யும் பணிகள் துவங்கிய நாள் முதலே அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும், வீடுகளை இழப்பவர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
பல இடங்களில் அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நில அளவீடு செய்யும் இடங்கள் முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு, வருவாய்த் துறையினர் நிலங்களை அளந்து முடித்தனர்.
இதில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நிலங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
இந்த நிலையில், பூலாவரி பகுதியிலிருந்து நில அளவீடு பணிகள் திங்கள்கிழமை துவங்கியது. பணிகள் துவங்கியது முதலே விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
குறிப்பாக பூலாவரி அருகே புஞ்சைகாடு பகுதியில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் மற்றும் புதிதாகக் கட்டிய வீடு ஆகியவை சாலை அமைப்பதற்காக இடிக்கப்பட உள்ளது.
இதனிடையே நிலம் அளவீடு செய்யும் பணிக்காக தோட்டத்தில் நட்டு வைக்கப்பட்ட எல்லை கற்களை சக்திவேல் ஆவேசமடைந்த நிலையில் பிடுங்கி எறிந்தார். அவரது மனைவியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மயங்கி விழுந்தார். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் சில பெண்கள் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் தற்கொலை செய்து கொள்ள வந்தனர்.
மேலும் விவசாயிகள், தங்களது குடும்பத்தோடு நிலத்தில் அமர்ந்து கதறி அழுது தங்களது நிலத்தை அளப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தில் ஒரு விவசாயி கூட நிலத்தைத் தருவதற்கு தயாராக இல்லை. இதுதொடர்பாக பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர். தங்களுக்கு பணம் வேண்டாம். நிலம் மட்டுமே வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இறுதியாக அரியானூர் பகுதியில் நிலம் அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள், எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, தங்களது நிலத்தை அளக்க அனுமதிக்க முடியாது என்று கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் நிலம் அளக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிலம் அளக்கும் பணி துவங்கி நடந்து முடிந்தது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 36.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளக்கும் பணிகள் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 35 கிலோ மீட்டர் வரையிலான நிலத்தை அளவீடு செய்துள்ளதாகவும், மீதமுள்ள இடம் வனத்துறைக்குள்பட்ட காப்புக் காடு என்பதால் எப்போது வேண்டுமானாலும் அளவீடு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிம்பாப்வே தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பல்!

தட்டிக்கொடுங்க... தட்டி விடாதீங்க! தேசிய விருது சர்ச்சைக்கு தனுஷ் பதில்!

இரவு, பகலாக சுத்தம் செய்யும் பணி! ஜந்தர் மந்தரில் 60 டன் குப்பைகள்!

பிறந்த மாதத்திற்கும் உடல்நலத்திற்கும் தொடர்பு இருக்கா? | அறிவியல் ஆயிரம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


