மேட்டூர் அருகே 17ஆம் நூற்றாண்டு புலிக் குத்தி வீரன் நடுகல் கண்டெடுப்பு

சேலம் மாவட்டம்,  மேட்டூர் அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி வீரன்  நடுகல் இருப்து தெரியவந்துள்ளது.
Updated on
1 min read

சேலம் மாவட்டம்,  மேட்டூர் அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி வீரன்  நடுகல் இருப்து தெரியவந்துள்ளது.  மேட்டூர் வட்டத்தில் உள்ள நங்கவள்ளி, வனவாசி மற்றும் ஜலகண்டபுரம் போன்ற பகுதிகளுக்கும் சங்க கால இலக்கியங்களில் கூறப்படும் சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  
தாரமங்கலத்தை கெட்டி முதலி மன்னர்கள் ஆண்டுள்ளனர்.  அதேபோல்,  மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் ஆலயத்துக்கும் மன்னர் காலத் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. நங்கவள்ளியில் சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த பழங்கால கல்வெட்டு ஒன்றையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போது மேட்டூரிலிருந்து வீரக்கல் வழியாக வனவாசி செல்லும் சாலையில் செல்லக்கல் திட்டு என்ற இடத்தில் புலியுடன் போரிடும் வீரனும் அதற்கு கீழே இரு பசுக்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்ட பலகைக் கல் கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பலகைக் கல்லைச் சுற்றி கூடாரம் போல கற்கள் வைக்கப்பட்டுள்ளன.  அப் பகுதி மக்கள் புலியுடன் போரிடும் வீரனின் கல்லை வழிபட்டு வருகின்றனர்.   தொல்காப்பியம் மற்றும் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல் கிராம மக்களையும்,  பசுக்களையும் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற கொடிய விலங்குகளிடமிருந்து காப்பாற்ற அவற்றுடன் போராடி உயிரிழக்கும் வீரர்களுக்கும் நடுகல் வைக்கும் வழக்கம் இருந்ததாகக்  கூறப்பட்டுள்ளது.  அந்த நடுகல்லை மக்கள் கடவுளாக வழிபட்டதாகவும் தகவல்கள் உள்ளன.
வீரக்கல்லில் உள்ள கல்லில் புலியை ஈட்டியால் குத்தும் வீரனும்,  அதற்கு கீழே பசுக்களின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.  
அதனால் கிராமத்தையும் பசுக்களையும் காக்க  அந்த வீரன் வனவாசி மலையில் இருந்து வரும் புலிகளிடம் போராடி இறந்ததால்,  புலியைக் குத்திய வீரனின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்  இந்த நடுகல்  வைக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 
வீரனுக்கு நடுகல் வைக்கப்பட்ட இடம் என்பதால்,  வீரக்கல் என்றே அந்த கிராமம் பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.  புலிக்குத்தி கல்லானது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்றும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த நங்கவள்ளி நா.பெ.கோ, பழனிச்சாமி,  ஓமலூர் கா.சீனிவாசன், வை.கலைச்செல்வன் ஆகியோர்  தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com