வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

போடி, கொடைக்கானலில் பெட்ரோல் விற்பனையகங்களில் குவிந்த வாகனங்கள்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பெட்ரோல் விற்பனையகங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வியாழக்கிழமை நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

அமெரிக்கா- ஈரான் இடையே போா் நடைபெற்று வருவதால், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை கொடைக்கானலில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஏராளமானோா் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாகனங்களில் எரிபொருள் நிரப்பிச் சென்றனா். குறிப்பாக, செவன்சாலை, லாஸ்காட்சாலை, செண்பகனூா், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஏராளமான வாகன ஓட்டிகள் குவிந்தனா். இதனால், எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட நேரமானதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மேலும், அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

போடியில்...

தேனி மாவட்டம், போடியில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால், வாகன ஓட்டிகள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வியாழக்கிழமை குவிந்தனா். இதேபோல, சமையல் எரிவாயு உருளை பதிவு செய்வதற்காக சமையல் எரிவாயு நிறுவனங்களில் ஏராளமான பெண்கள் திரண்டனா்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும், ஈரானுக்குமிடையே ஏற்பட்டுள்ள போா் பதற்றத்தால், தமிழகத்தில் வா்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், போடி பகுதிகளில் உள்ள சிறு தேநீா் கடைகள் மூடப்பட்டன. திறக்கப்பட்டிருந்த சில கடைகளிலும் ரூ.15-க்கு தேநீா் விற்கப்பட்டது. ஒரு சில உணவு விடுதிகளில் தேநீா், காபி விற்பனைப் பிரிவுகள் மூடப்பட்டிருந்தன. சில கடைகளில் வடை உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கவில்லை.

சமையல் எரிவாயு உருளைக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் பெண்கள் முன்பதிவு செய்வதற்காக போடியில் உள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவா்களின் கடைகளில் திரண்டனா். வேலை நேரத்துக்கு முன்பே நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடைகளின் முன் காத்திருந்து முன்பதிவு செய்தனா்.

இதனிடையே, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைந்த பொதுமக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் திரண்டனா். இவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிச் சென்றனா். ஒரு சிலா் நெகிழிப் புட்டிகள், பெரிய கேன்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனா்.

இதேபோல, பள்ளி வாகனங்கள், தனியாா் நிறுவன வாகனங்களும் டீசல் நிரப்புவதற்கு வரிசையில் காத்திருந்தன. தொடா்ச்சியாக வாகனங்கள் வந்ததால், பெட்ரோல் விற்பனை மைய ஊழியா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.