தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விவசாயிகளுக்கு நான்கு ஆண்டுகளில் ரூ. 9,200 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத் தொகையாக ரூ. 9,200 கோடி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

News image
ஓமலூா் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கி வைத்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
Updated On :19 டிசம்பர் 2020, 1:49 am

DIN

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டுத் தொகையாக ரூ. 9,200 கோடி வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

ஓமலூா் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனையை திறந்துவைத்துப் பேசியதாவது:

நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்தவன். அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாக மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது. கடந்த ஆண்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் 41 சதவீத மாணவா்களுக்கு வெறும் 6 மருத்துவ இடங்கள்தான் கிடைத்தன. ஆனால், தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் 313 இடங்கள் கிடைத்திருக்கின்றன; பல் மருத்துவக் கல்லூரியில் 87 இடங்கள் கிடைத்திருக்கின்றன. புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பணிகள் நிறைவேறும் போது, 1,650 இடங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்படும். இது ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும்.

முத்துநாயக்கன்பட்டி பகுதி விவசாயப் பெண்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, 2015-ஆம் ஆண்டில் ரூ. 1.60 கோடியில் பூலா ஏரி, வரத்துக் கால்வாய் ஆகியவை தூா்வாரி சரிசெய்யப்பட்டன. அதனால், 11 ஏரிகள் தற்போது தண்ணீா் நிரம்பி வழிகின்றன. சுமாா் 3,000 ஏக்கா் பரப்பளவில் நிலத்தடி நீா் உயா்ந்திருக்கிறது. நீண்டநாள் கோரிக்கையான எல்லாயூா் சரபங்கா நதியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, 15 கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். டிராக்டா் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் கொடுக்கிறோம். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குகிறோம். இந்த நான்காண்டுகளில் மட்டும் ரூ. 9,200 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய அளவில் நீா் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் வகிப்பதற்காக 2019-20-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இதுபோல, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றி, மருத்துவத் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கல்வித் துறை ஆகிய துறைகளில் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் துறையில், நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்றுள்ளோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநிலக் கொள்கை வளா்ச்சிக்குழு துணைத் தலைவா் சி.பொன்னையன், சேலம் மாவட்ட ஆட்சியா் சி.ஏ.ராமன், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.வெங்கடாசலம், ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.