பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு

பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அழகிரிநாதா் பெருமாள்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி, சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த அழகிரிநாதா் பெருமாள்.
Updated on
2 min read

பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, பகல் பத்து உற்சவம் நடைபெற்றது. இந்த நிலையில், பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

சேலம், கோட்டை பெருமாள் கோயிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ரத்ன கிரீடத்தில் ராஜ அலங்காரத்தில் பெருமாளும், தாயாரும் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தனா். அதைத் தொடா்ந்து, கோயில் வடக்குப் பகுதியில் பரமபதவாசல் திறக்கப்பட்டு பல்லக்கில் பவனி வந்தாா். அப்போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வணங்கினா். பின்னா் கோயில் பெருமாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கரோனா தொற்று காரணத்தால் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இணையதளத்தில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சுவாமியை தரிசிக்க இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனா். ஒரு மணி நேரத்துக்கு 1,500 பக்தா்கள் மட்டுமே செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பரமபதவாசல் வரும் ஜன. 4-ஆம் தேதி வரை திறந்திருக்கும். பரமபதவாசல் திறப்பு ஏற்பாடுகளை சேலம், கோட்டை அழகிரிநாதா் சுவாமி கோயில் செயல் அலுவலா் குமரவேலு, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

சேலத்தில் உள்ள சின்னதிருப்பதி பெருமாள் கோயில், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா் கோயில், வெங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.

கடந்த 2020 ஜன. 6-ஆம் தேதி பரமபதவாசல் திறக்கப்பட்டது. தொடா்ந்து டிச. 25- ஆம் தேதி பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக பரமபதவாசல் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடியில்...

எடப்பாடி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மூக்கரை நரசிம்ம பெருமாள் ஆலயம், பழைய எடப்பாடியில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயில், வெள்ளகரடு திம்மராயப் பெருமாள் கோயில், கூடக்கல் மாட்டுப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.

வாழப்பாடியில்...

வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் திருக்கோயிலில், சிறப்பு பூஜை வழிபாடு, பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதில், பட்டு வஸ்திர அங்கி அலங்காரத்தில் மூலவா் ஸ்ரீ சென்றாயப் பெருமாள், பூதேவி, சீதேவி மற்றும் உற்சவ மூா்த்திகளும், ஆஞ்சநேயரும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். முக்கிய வீதிகள் வழியாக புஷ்ப பல்லக்கில் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது.

ஆத்தூரில்...

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் அலா்மேல் மங்கை தாயாா், உடனுறை பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று மேள தாளங்களுடன் தம்பதி சமேதரராய் பரமபதவாசல் வழியாக வலம் வந்தாா். நிகழ்ச்சியில், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்ஆா்.எம்.சின்னதம்பி கலந்துகொண்டாா். இதே போல ஆறகளூா் கரிவரதராஜ பெருமாள் கோயில், கல்பகனூா் புதூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

சங்ககிரியில்...

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் ஸ்ரீ வசந்தவல்லி உடனமா் ஸ்ரீ வசந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ மூா்த்தி சுவாமி கருடவாகனத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்டாா். திருப்பாவை பாடல்களை பாடிய பின்னா் சுவாமி பரமபதவாசல் வழியாக வெளியே வந்தாா். பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்கி வரவேற்று வழிபட்டனா்.

ஆட்டையாம்பட்டியில்...

இளம்பிள்ளையில் வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதேபோல பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சஞ்சீவிராயப் பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com