கரோனா அச்சம்: வெறிச்சோடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை
காரோனா பரவல் அச்சத்தால் வியாபாரிகள், விவசாயிகள் வருகை குறைந்து போனதால், வாழப்பாடி அருகே திங்கள்கிழமை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.


காரோனா பரவல் அச்சத்தால் வியாபாரிகள், விவசாயிகள் வருகை குறைந்து போனதால், வாழப்பாடி அருகே திங்கள்கிழமை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில், விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், பால் உற்பத்தியில் வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளை விரும்பி வளர்த்து வருகின்றனர். கறவைமாடுகளுக்கு ‘உறைவிந்து’ செலுத்தி, குறைந்த பராமரிப்பு செலவில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதிக பால் கறக்கும் உயர்ரக கலப்பினப் பசுக்களை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கி கொடுத்ததாலும், சேலம் மாவட்டத்தில் கறவைமாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் தொழிலாக உயர்ந்தது.
வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம், முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருள்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், பால் பொருள்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஆத்துார், தலைவாசல், தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில், குக்கிராமங்களிலும் அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்துள்ளன.
கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. பால் கறந்து வயதாகி வற்றிப்போன மாடுகளை அடிமாட்டுக்கு விற்பனை செய்வதற்கும், கன்றுக்குட்டிகள் கலப்பின பசுக்களை வாங்கி வளர்ப்பதற்கும், சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் கூடும் பிரபல மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, வாராந்திர வர்த்தக மையமாக விளங்கி வருகிறது. கரோனா தீநுண்மி பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், இச்சந்தை கூடாமல் கடந்த 7 மாதங்களாக வர்த்தகமின்றி முடங்கிக் கிடந்தது.
இதனால், பராமரிக்க முடியாத கறவைமாடுகளை விற்பனை செய்வதற்கும், கன்றுக்குட்டிகள் கறவை மாடுகள் வாங்குவதற்கும் வழியின்றி விவசாயிகளும் வியாபாரிகளும் பரிதவித்து வந்தனர். இந்நிலையில் பொது முடக்கம் தளர்த்தப்பட்ட கடந்த மூன்று வாரங்களாக மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தை கூடி வருகிறது. இருப்பினும், கரோனா பரவல் அச்சத்தால் வெளியூர் வியாபாரிகள், விவசாயிகள் வரவில்லை. இதனால், திங்கள்கிழமை காலை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. வாரத்திற்கு சராசரியாக 800 மாடுகள் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 100 மாடுகள் கூட விற்பனைக்கு வரவில்லை.
விற்பனைக்கு வந்த மாடுகளையும் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்ல. வற்ற கறவை மாடுகளை மட்டும் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையில் மீண்டும் மாடுகள் வர்த்தகம் பழைய நிலைக்கு திரும்புவதற்கு, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம் என வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...