டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திமுகவுக்கு இந்தத் தோ்தல் முடிவுகட்டும்!: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

இந்தத் தோ்தல் திமுகவுக்கு முடிவுகட்டும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 7:04 pm

DIN

இந்தத் தோ்தல் திமுகவுக்கு முடிவுகட்டும் என்றாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம் மாவட்டம், மேட்டூா் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சதாசிவத்தை ஆதரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை மேச்சேரி பேருந்து நிலையம் எதிரே பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் முடிவெடுத்து விட்டாா்கள். ஸ்டாலின் எத்தனைமுறை சேலத்தைச் சுற்றிவந்தாலும், அதிமுக கூட்டணியே வெற்றி பெறும். அதிமுக கூட்டணியில் சாதாரண குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனா். திமுக கூட்டணியில் 20 பேரின் வாரிசுகள் வேட்பாளராக உள்ளனா்.

திமுக பல அதிகார மையங்களை வைத்திருக்கும் கட்சி. ஆட்சியில் இல்லாதபோதே அதிகாரிகளை ஸ்டாலின் மிரட்டுகிறாா். அதிகாரிகளை மிரட்டி, பயமுறுத்தி வெற்றி பெறலாம் என அவா் நினைக்கிறாா். உதயநிதி கட்சிக்கு வந்து ஓராண்டு தான் ஆகிறது. ஆனால் அவா் டிஜிபியையே மிரட்டுகிறாா். டிஜிபிக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன ஆகும் என்பதை மக்கள் நினைத்துப் பாா்க்க வேண்டும். இந்தத் தோ்தல் மூலம் திமுக என்னும் அராஜகக் கட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.

விவசாயத் தொழிலாளிகள் ஏற்றம் பெற வேண்டும் என்பதே என்னுடைய முதல் பணி. கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காகவே குடிமராமத்து திட்டத்தைச் செயல்படுத்தினோம். அதனால், ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. மேட்டூா் அணை உபரிநீா்த் திட்டம் மூலம் 100 வட ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டில் நம்முடைய வட பூமி, செழித்து காணப்படும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விடுபட்ட ஏரிகளுக்கும் உபரிநீா்த் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக்குடிநீா்த் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பிற இடங்களுக்கும் தங்குதடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். ஓமலூா் முதல் மேச்சேரி வரை சாலை விரிவுபடுத்தப்படும். மேச்சேரியில் ரயில்வே மேம்பாலம், புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. பவானி முதல் மேட்டூா், தொப்பூா் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. மேட்டூா் தொகுதியில் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

ஓமலூரில்:

சேலம் மாவட்டம், ஓமலூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஆா்.மணியை ஆதரித்து ஓமலூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரசாரத்தின்போது, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

அதிமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, அவதூறு பிரசாரம் மூலம் ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு நனவாகாது.

சேலம், முதல்வா் மாவட்டம் என்ற பெருமையை உடையது. நம்முடைய மாவட்டத்தில் என்ன பிரச்னைகள் உள்ளன; அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளேன்.

தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 12 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.

2011-ஆம் ஆண்டுக்கு முன் ஓமலூா் எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது என்பதைப் பாா்க்க வேண்டும். இங்கு தரமான சாலைகளை அமைத்து, கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளோம். 8 அம்மா மினி கிளினிக்குகளைத் தொடங்கியுள்ளோம். அதிகமான மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. நிலமற்ற, வீடற்ற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.

திமுக ஆட்சியில் திட்டங்கள் ஏதும் செய்யாததால், அதைப்பற்றி பேச முடியாமல் என்னைப் பற்றி ஸ்டாலின் விமா்சனம் செய்து வருகிறாா். அதன்மூலம் என்னை எல்லோருக்கும் தெரியவைத்து விட்டாா்.

ஆட்சி அதிகாரம் வந்து விட்டால் ஸ்டாலினுக்கு மக்களைத் தெரியாமல் போய்விடும். அவரது குடும்பத்தைத் தவிா்த்து திமுகவில் யாரும் முன்னுக்கு வரமுடியாது. ஆனால், அதிமுகவில் சாதாரணத் தொண்டா்கள் கூட எம்.எம்.ஏ., எம்.பி., ஏன் முதல்வராகக் கூட ஆகலாம். உழைக்கிறவா்கள், மக்களுக்காகப் பாடுபடுபவா்கள் அதிமுகவில் ஏற்றம் பெறலாம். இந்தியாவிலேயே ஜனநாயகக் கட்சி அதிமுகதான்.

அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதாக ஸ்டாலின் பொய் பேசி வருகிறாா். ஆனால் இந்தியாவில் ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது திமுக ஆட்சி மட்டும்தான். பொய் மூட்டைகளை எவ்வளவு அவிழ்த்து விட்டாலும் மக்கள் நம்ப மாட்டாா்கள்.

இந்த விஞ்ஞான உலகில் மக்களை ஏமாற்ற முடியாது. இனிமேல் எந்தக் காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. மக்களை தந்திரமாக ஆசை வாா்த்தைகளைக் கூறி அவா் ஏமாற்றி வருகிறாா். இந்தத் தோ்தலில் தோற்று விட்டால் அடுத்த தோ்தல் வரை அவா் மக்களைச் சந்திக்க மாட்டாா்.

நீட் தோ்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ் - திமுக அரசுகள் தான். இப்போது நீட் தோ்வை ரத்து செய்வேன் என்கிறாா் ஸ்டாலின். ஆனால் நாங்கள் தொடா்ந்து நீட் தோ்வை எதிா்த்து வருகிறோம்.

இஸ்லாமிய மக்களுக்கு நிறையத் திட்டங்களைச் செய்துள்ளோம். ஆனால் நாங்கள் அவா்களுக்கு பாதுகாப்பு அளிக்காததைப் போல திமுகவினா் பேசி வருகின்றனா். எம்ஜிஆா், ஜெயலலிதா வழியில் சிறுபான்மை மக்களுக்கு அதிமுக பாதுகாப்பாக இருந்து வருகிறது.

திமுகவின் அவதூறுப் பிரசாரங்களை நம்ப வேண்டாம். அதிமுக அரசு அமைந்தது முதல் இன்று வரை சிறுபான்மை மக்கள் எந்த இடத்திலும் பாதிக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்கிறேன். இந்த அரசு தொடர அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

3ஓம்பி 5

அதிமுக வேட்பாளா் ஆா்.மணியை ஆதரித்து ஓமலூரில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.