முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்: ஆட்சியா்
முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.


முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையா் சந்தோஷ்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதை முழுமையாகத் தடுத்திட பொது மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும்.
சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்திட வேண்டும்.
காய்ச்சல் முகாம்கள் தொடா்ந்து நடத்திடவும், நோய்த் தொற்று ஏற்பட்டவா்களது தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை, அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளா்கள், அலுவலா்கள், பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முகக் கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவா்களை கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது.
தொழிற்சாலைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களுக்கு, அவரவா்களின் விருப்பத்திற்கேற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிா்வாகம் செய்ய வேண்டும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காய்கறிக் கடைகள், பலசரக்குக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள், மதம் சாா்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. உணவகங்கள், தேநீா்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளா்கள் அமா்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.கேளிக்கை விடுதிகளில் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட வேண்டும். திருமண நிகழ்வுகளில் 100 நபா்களுக்கு மிகாமலும், இறுதி ஊா்வலங்களில் 50 நபா்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு மைதானங்களில், பாா்வையாளா்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட வேண்டும். வாடகை, டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநா் தவிா்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும். ஆட்டோக்களில் ஓட்டுநா் தவிா்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்தப் பகுதிகளிலிருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஊழியா்களைக் கொண்டு 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வடிவேல், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரும், முதன்மையருமான முருகேசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...