ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வாழப்பாடி: செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துரத்தியதில் கிணற்றில் விழுந்து விவசாயி பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் காரில் கடத்திச்சென்ற  கும்பலிடமிருந்து  தப்பிக்க இருட்டில் ஓடிய விவசாயி, கிணற்றில் விழுந்து பலியானார். 

News image
வாழப்பாடி: செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் துரத்தியதில் கிணற்றில் விழுந்து விவசாயி பலி
Updated On :14 செப்டம்பர் 2021, 9:19 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் காரில் கடத்திச்சென்ற  கும்பலிடமிருந்து  தப்பிக்க இருட்டில் ஓடிய விவசாயி, கிணற்றில் விழுந்து பலியானார். 

இச்சம்பவம் குறித்து வாழப்பாடி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ராஜா (35). விவசாயியான இவருக்கு செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்திய பணத்தை பங்கு போடுவதில் இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், கணேசன், செல்வம், தர்மன் உள்ளிட்ட சிலருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை மாலை கருமந்துறை அருணா கிராமத்திற்கு தூக்க நிகழ்வுக்கு வந்திருந்த விவசாயி ராஜாவை, சீனிவாசன் தலைமையிலான கும்பல் காரில் கடத்தியுள்ளனர்.

Story image

வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே நேற்று இரவு காரிலிருந்து இறங்கி தப்பிச் செல்ல முயன்ற ராஜாவை, இந்தக் கும்பல் துரத்தி சென்றுள்ளனர். அப்போது  அப்பகுதியில் இருந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜா விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஒருமணி நேரம் போராடி ராஜாவின் உடலை மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கர் தலைமையிலான காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி ராஜாவை வாழப்பாடி கடத்தி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த வாழப்பாடி காவலர்கள், கார் ஓட்டுநர் கருமந்துறையை சேர்ந்த கார்த்திக் மற்றும் இந்த கும்பலுக்கு உதவிய வாழப்பாடியைச் சேர்ந்த திலீப், ஜீவா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயி ராஜாவை கடத்தி வந்து இவரது சாவிற்கு காரணமான செம்மரக்கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்த சீனிவாசன், கணேசன், தர்மன், செல்வம் உள்ளிட்டோரை பிடிக்க வாழப்பாடி காவலர்கள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே செம்மரக்கட்டை கடத்தல் கும்பலிடமிருந்து தப்பிக்க முயற்சித்த விவசாயி, கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் வாழப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோன விவசாயி ராஜாவிற்கு, பிரியா என்ற மனைவியும், திருப்பதி, தனுஷ், பிரவீன், என்ற மூன்று ஆண் குழந்தைகளும், பிரேம்கா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இறந்துபோன ராஜாவின் மனைவி பிரியா மற்றும் இவரது நான்கு குழந்தைகளும் வாழப்பாடி காவல் நிலையத்தில் கதறி அழும் காட்சி காண்போர் கண்களை கலங்கச் செய்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.